உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

இளங்குமரனார் தமிழ் வளம் - 21

வையையால் நிலவளம் பெற்றோங்கும் சோழவந்தான், அரசஞ் சண்முகனாரால் புலவளம் பெற்றுப் புவிபுகழ் பெருமை ஏற்றது. சோழவந்தானை நினைக்கும் பொழுது நெஞ்சில் நிற்பவர் எவர்? எல்லாருமா நினைவில் முகிழ்க்கின்றனர்? சோழவந்தானே சண்முகனார் ஆயது; சண்முகனாரே சோழவந்தான் ஆனார். சோழவந்தானும் சண்முகனாரும் மலரும் மணமும்போல் இயைந்துவிட்டனர்.

ஊர்ப் பெயர்க் காரணம்

புலவர்மணி சண்முகனார் பிறந்த ஊர்ப் பெயர் ஆராய்ச்சிக்கு உரியதாகின்றது. ஏனைய வேந்தர்களை எதிரிட்டு இயமனுலகு புகச் செய்ய வல்ல ஏற்றமிக்க ஆற்றல் வாய்ந்த வேந்தர் பலர் பராந்தகன், பராந்தகதேவன், பராந்தக சோழன், பராந்தக பாண்டியன் என்னும் பெயர்கள் பெற்றுள்ளனர். பர அரசர்க்கு அந்தகனே (இமயன்) பராந்தகன். இப்பெயர்கள் போலவே சோழாந்தகன் (சோழர்க்கு அந்தகன்) என்னுஞ் சிறப்புடன் பாண்டிய வேந்தன் ஒருவன் இலங்கினான்.

""

அவன் இயற்பெயர், வீரபாண்டியன் என்பது வீரபாண்டியன் கல்வெட்டுக்கள், "சோழன் தலைகொண்ட கோவீரபாண்டியன் என்று பாராட்டுகின்றன. சோழன் தலை கொண்ட பெருமிதங்கருதி அவன் சோழாந்தகன் என்னுஞ் சிறப்புப் பெயர் பெற்றான். அச்சிறப்பு விளங்குமாறும் தனக்கு அழியாத அடையாளமாய் இருக்குமாறும் அவன் தன் பெயரால் அழைத்துக் கொண்டவூர் சோழாந்தக நல்லூர் என்னும் சோழவந்தானூர் ஆகும். இப் பெயரே சோழவந்தானாக மருவி வழங்குகின்றது. இதனைப் பழங் கல்வெட்டே அன்றிச்,

“சோழன் தலைகொய்த சொல்வீர பாண்டியனைச் சோழாந் தகனென்று சொன்னாரே - தோழியே! சோழாந் தகனென்ற சொல்மருவித் தீந்தமிழில் சோழவந்தான் ஆனதெனச் சொல்'

என்னும் புதுப்பாட்டும் விளக்கும்.

99

சோழாந்தகச் சதுர்வேதி மங்கலம் என்னும் பெயரும் இவ்வூருக்கு உண்டு. அன்றியும் சனகை என்றும், சனக நாராயணபுரம் என்றும் வேறுபெயர்களும் இவ்வூருக்கு உள.

1.பாண்டியர் செப்பேடுகள் பத்து XXXII