உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரும்புலவர் அரசஞ் சண்முகனார்

3

இவ்வூரின் பழம் பெயர் "குருவித் துறை” என்பர். "சோழனை வென்றான் நகர்" என்று மதுரை மீனாட்சியம்மை சந்தத் திருவடி மாலையில் சண்முகனார் குறிப்பிடுகின்றார்.

சண்முகனாரின் முன்னோர்

சோழவந்தான் வளங்கண்டு வாழவந்தார் பலர். அவருள் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த செண்பகம் பிள்ளை என்பவரும் ஒருவர். பதினேழாம் நூற்றாண்டளவிலே சோழவந்தானில் குடியேறிய இச் செண்பகம் பிள்ளை குடும்பத்தார். இன்று பெருகிப் பல்கிக் கல்வி, திரு. ஆற்றல்களில்சிறந்தோங்குகின்றனர். இந்நற் குடியிலே பிறந்தார் இராமுபிள்ளை என்னும் நல்லார். அவர் தம் மைந்தர் அரசப்ப பிள்ளை. அரசப்பர் தக்க பருவம் அடைந்தவுடன் உறவினரும் பனையூரில் வாழ்ந்தவருமான வீரபத்திர பிள்ளை என்பவர்தம் மகளார் பார்வதி என்பவரைத் திருமணம் செய்துகொண்டு இல்லறம் இனிது நடாத்தினார். சண்முகனார் பிறப்பு

அரசப்பர் பார்வதியம்மை ஆகிய இவர்கள் தம் அருமைப் புதல்வராய் விபவ வருடம்,புரட்டாசித் திங்கள் முதல் நாள் செவ்வாய்க் கிழமை பகல் நாழிகை பதின்மூன்றரைக்கு விருச்சிக ராசியில் (15-9-1868) பிறந்தார் சண்முகனார். சண்முகனார்க்குப் பின் பிறந்தவர் இருவர். இருவரும் புதல்வர்களே; இராமுபிள்ளை, சதாசிவம்பிள்ளை என்னும் பெயர்களால் அழைக்கப்பெற்றனர்.

அரசப்பர் அருங்குணங்கள்

அரசப்பருக்கு உழவுத் தொழில்மேல் மிகுந்த ஈடுபாடுண்டு. அவர் குடிநலன் கருதி மடியா உளத்தொடும் முயற்சியில் ஊன்றியிருந்தார். "வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான்” என்னும் நன்மொழிக்கேற்ப, உழவுத் தொழிலே தொழிலாகக் கொண்ட அரசப்பர் உயர்ந்த வேளாளராக உபகாரியாக - இலங்கினார். அவர்தம் குணநலன்களை அவர் செல்வமணியாம் சண்முகனார் நவமணிக்காரிகை நிகண்டின் தற்சிறப்புப் பாயிரத்தில் விரித்துள்ளார்.

1. திரிகடுகம், 12.