உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138

இளங்குமரனார் தமிழ் வளம் - 21

திருத்தம் செய்ய வேண்டுவதன் இன்றியமையாமை குறித்து மிகவும் ஆய்ந்து எட்டுக் குறிப்புகள் வழங்கியுள்ளார்.

1) மூல நூலிலோ உரையிலோ தாம் திருத்தம் புரியவில்லை என்றும், உரை விளக்கம் மேற்கோள் ஆகியவற்றில் உள்ள வழுக்களே திருத்தப்பட்டன என்றும்,

2) மேற்கோளிலும் பொருள் துணிவுக்கு உரிய பகுதியில் திருத்தப்படாமல் பிற பகுதியிலேயே திருத்தம் செய்யப்பட்டன என்றும்,

3) உரை வரையப்படாத நூலின் வாக்கிய முடிபு வழுவே திருத்தப்பட்டன என்றும்,

4) சுவடியில் உள்ளவாறு பதிப்பித்துத் திருத்தம் வேண்டி அறிக்கை விடுத்தும் எவரும் திருத்தம் தராமையால் தம்மால் செய்யப்பட வேண்டுமெனச் செய்யப்பட்டன என்றும்,

5) திருத்தம் செய்யப்பட்டதை உலகிற்குத் தெரிவியாது திருத்தம் செய்வது ஆசிரியர் வாக்கென்று நடையிட விடுவதே குற்றம் என்று கொள்ளப்படும் என்றும்,

6) சுவடியில் பிழைபட்டது ஆசிரியரது அன்று என்றும், மாறுபட்டு நிற்பதன் மாற்றத்தை விலக்கிச் செய்யப்பட்டதே என்றும்,

7) இத் திருத்தங்களும் அச் சமயச் சான்றோர் பலரைக் கலந்து சுவடியைக் காட்டியும் திருத்தம் செய்யப்பட்ட வடிவு காட்டியும் அவர்கள் ஒப்புதலுடன் செய்யப்பட்டது என்றும்,

8) தாம் திருத்திய மூல நூலாசிரியர் கொண்ட பழைய வடிவமாக இருக்கவும் கூடும் என்றும், இவற்றால் உலகம் தம்மைப் பொறுத்துக்கொள்ளும் என்றும் கூறுகின்றார்.

எலும்பு அழுகிய நாசியைச் சத்திரம் பண்ணிப் பொன்னாசி பொருத்தியது போலவும், என்பு நொறுங்கிய காலை வெட்டி யெறிந்து பொய்க்கால் வைத்தது போலவும், முழுத் தோட்டமும் அகத்தி நட்டினும் வெற்றிலைத் தோட்டம் வெற்றிலைத் தோட்டமே என்பது போலவும் தம் செயற்பாடு அமையுமெனக் குறிக்கிறார். மேலும் சங்கர நமச்சிவாயர் உரையை இடைமடுத்துச் சிவஞான முனிவர் வரைந்த புத்துரையையும், வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்க அணியியலில் சில நூல்களை அவர் மகன் சதாசிவதேசிகர் செய்ததையும் சுட்டிக் காட்டுகிறார்.