உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140

இளங்குமரனார் தமிழ் வளம் - 21

படுத்தும் போது, சொல்லதிகாரம் அச்சிட்ட பின்னரும் தொல்காப்பிய நச்சினார்க்கினியர் உரை முழுமையாகாது விடப்படின், சொல்லும் பொருளும் பெற்றும் எழுத்தில்லாமல் தலையற்ற உடலையே தாங்கலாகும். ஆதலால், எழுத்தையும் சேர்த்தே அச்சிடல் வேண்டுமெனக் கட்டுரைத்தனர். ஆனால் மழவை மகாலிங்கரால் தொல். எழுத்து, நச்சினார்க்கினியம் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னரே அச்சிடப்பட்டிருந்தது! இஃது அவர் கொள்கைக்கு மாறாயிற்று. அதனால்,

"ஒரு முறையாயினும் பிறர் பிரசுரித்த நூல்களை மீள அச்சிடுவிக்காத எனக்கு இவ்வெழுத்ததிகாரம் ஒரு விலக்காயிற்று. அன்றியும், ஒரு நூலின் முதலிலே யுள்ளதோர் சொற்ப பாகத்தை மாத்திரம் ஒருவர் பிரசுரஞ் செய்து காலகதியடைந்துவிட்டாற் பின்னர் அந்நூல் முழுவதையும் அச்சிடுவோர் முதற்பாகத் தையும் சேர்த்து அச்சிடுதல் தவறன்றாம். உலகவழக்கும் அதுவே."

எனக் கொண்டார். மழவை மகாலிங்கர் சென்னைப் பகுதி ஏட்டுப் படிகளைக் கொண்டு ஆய்ந்து பதிப்பித்திருந்தார். அதனால் தென்னாட்டுப் படிகள் சிலவற்றைக் கொண்டு ஆய்ந்து அவ்வெழுத்ததிகார நச்சினார்க் கினியத்தை வெளியிட்டார் தாமோதரர்.

சூளாமணிப் பதிப்பிற்கு மூன்று சுவடிகளே தாமோத ரர்க்குக் கிடைத்தன. அவற்றைப் படியெடுத்து ஆய்ந்து பதிப்புப் பணியைத் தொடங்கினார். நூறு பக்க அளவும் அச்சாயிற்று. அதன்பின் மல்லாகம் வி. கனகசபை அவர்கள் படியொன்று கிடைத்தது. அதற்கும் தம்மிடம் இருந்த முன்மூன்று சுவடிகளுக்கும் பல வேறுபாடுகள் இருந்தன. அதனால் இன்னும் சில சுவடிகள் கிடைப்பின் அவற்றையும் தேடி ஒத்துப் பார்த்துக்கொண்டு அச்சிடுதல் நலமென்று முடிவு செய்தார். பின்னர் ஒரு பழம்படி காஞ்சியில் கிடைத்தது. இவற்றொடு பழைய இருப்புச் சுவடிகளை ஒப்பிட்டுப் பார்த்த அளவில் முன்பு அச்சிட்ட அவ்வளவும் மறுபடி திருத்தி அச்சிட வேண்டியதாயிற்று.

திருவாவடுதுறைத் திருமடத்தில் இருந்துதான் இலக்கண விளக்கத்திற்கு மறுப்புகள் வலுவாய்க் கிளர்ந்தன. எனினும் அத் திருமடத்தின் தலைவராகப் பின்வந்த தவத்திரு சுப்பிரமணிய தேசிகர் இலக்கண விளக்கத்தையும், சமண சமயக் காப்பியமாகிய சூளாமணியையும் வெளியிடுமாறு தாமோதரரைத் தூண்டினார். இவ்விரண்டற்கும் ஏட்டுச் சுவடிகள் வழங்கியதுடன் வழக்கமாக மடத்திற்கு வாங்கும் படிகளுக்குரிய விலையுடன் இவ்விரு