உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளர்த்த தாமோதரனார்

141

நூல்களின் அச்சீட்டுக்கும் தனித்தனி உருபா நூறு நன்கொடை வழங்குவதாகவும் கூறி விரைவில் பதிப்பிக்கத் தூண்டினார். இவற்றை இலக்கண விளக்கப் பதிப்புரையிலும் சூளாமணிப் பதிப்புரையிலும் குறிப்பிடுகிறார் தாமோதரர்.

ஒரு நூல் பதிப்புரையிலே அடுத்து இந்த நூல் ஆய்வில் உள்ளது என்றும், இவை இவை வெளிவரும் என்றும் குறிப்பிடுதல் தாமோதரர் வழக்கமாகும். தம் அச்சீடு ஆய்வு முதலியவற்றை நூல் வெளிவரும்வரை மறைவாகவே வைத்திருத்தல் அக்கால வழக்கமாக இருந்தும் அதனை மேற்கொள்ளாமல் வெளிப்படக் காட்டிய தாமோதரர் பேருள்ளம் பாராட்டுக்கு உரியதாகும்.

கலித்தொகைப் பதிப்புரையிலே 'இலக்கண விளக்கம் பதிப்பது குறித்து எழுதுகிறார். சூளாமணி வெளியீடு பற்றியும் குறிக்கிறார்.

தொல்காப்பியம் எழுந்து நச்சினார்க்கினியப் பதிப்புரையில் சொல் நச்சினார்க்கினியம் பதிப்பாகி வருவதையும், எட்டுத்தொகை ஆய்வில் இருப்பதையும் குறிக்கிறார். அதில் குறிப்பிடும் தகடூர் யாத்திரை பின்னர்க் கிட்டாமலே போனது பேரிழப்பாகும்!

புறநானூற்றுரை ஈற்றில் 140 செய்யுளும், பரிபாடல் முழுப்படியும், பதிற்றுப்பத்தில் முதற்பத்தும் கடைசிப் பத்தும் அகப்படவில்லை என்றும், அவற்றை வைத்திருக்கும் பெருமக்கள் எவராயினும் சில நாள்களுக்கு இரவலாக வழங்கின் தாம் மிகக் கடப்படுவதுடன், தம் வழக்கப்படி அச்சிட்ட படிகள் இரண்டு இரண்டு வழங்குவதாகவும் குறிப்பிடுகிறார்.

இலக்கண விளக்கப் பதிப்புரையில் ஒரு சிறப்பான குறிப்பைப் பொறிக்கிறார் தாமோதரர். மாணவர்கள் இலக்கணத் தேர்ச்சி பெறுவது பற்றியும், அவர் நிலையில் விலை தந்து வாங்குதற்குத் தக்க உதவியைக் கருதியும் அக் குறிப்பை வெளிப்டுத்தியுள்ளார்:

"மாணவர்கள் தமிழ் இலக்கணம் ஐந்தும் எவ்வாற்றானும் ஓதி உணர்தல் வேண்டும் என்னும் விருப்பம் மிக்குளேன் ஆதலானும் அவர்களுள் பெரும்பான்மையோர் அதிகச் செல்வரல்லர் ஆதலானும், வித்தியாசாலைகளில் தமிழ் கற்கும் மாணாக்கர்கள் 25 பெயருக்குக் குறையாமல் ஒருங்கு சேர்ந்து தமது பாடசாலைத் தலைவர் மூலமாக நேரே என்னிடமிருந்து அழைப்பிப்பின் இப்புத்தகம் அவர்களுக்கு அரைவிலையாகக் கொடுக்கப்படும்" என்பது அது. அந்நூல் விலை உருபா 5-00.