உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளர்த்த தாமோதரனார்

151

முன்வராமைக்குப் பொருள் முட்டுப்பாடு ஒரு காரணமேயாயினும், தொல்காப்பியந் தொலைந்தாலும் தமது புகழ்க்காப்பியம் தொலையக் கூடா தென்ற அந்தரங்க எண்ணமே முக்கிய காரணம் என்பது கருதத் தக்கது. இந்தப் பைத்திய நிலையில் ஆங்கில மோகமும் அதிகரிக்கத் தொல்காப்பியப் பிரதிகள் வரவர அருகித் தமிழ் நாடு முழுவதிலும் விரல் விட்டு எண்ணத்தக்க அளவில் சுருங்குவதைத் தமிழ்த் தாமோதரம் பிள்ளை கண்டார்; கண்ணீர் வடித்தார்: தமக்கு வரும் அவமானங்கள் ஏளனங்களுக்கு இளைக்காது தமிழ் அன்னைக்குப் பிராணவாயுப் பிரயோகம் செய்ய முன்வந்தார்; தொல்காப்பியக் கடலில் இறங்கினார். சென்னைத் தமிழ் வித்துவ சூடாமணிகள் சிலர். தாமோதரம் பிள்ளை இமாசலத்தையும் கங்கையையும் யாழ்ப்பாணம் கொண்டு போகப் போகிறார் என்று சிரித்தார்கள்" என்கிறார்கள்.

தொல்காப்பியம் முதலிய நூல்கள் இறந்து படாது காத்த தாமோதரர் செய்கையைப் பாராட்டும் இக்கட்டுரை யாசிரியர் அவரை ‘ஆதிவராகம்' என்று குறிக்கிறார். திருமால் வராகமாய்த் தோன்றித் தம் வலிய கொம்புகளால் அறிவுக் கருவூலங்கள் அழியாமல் காத்த தொன்மக் கதையொடு சார்த்தித், தொல்காப்பியம் சிதைந்ததுமறையும் காலத்தில் அதனைத் தேடி எடுத்து ஏந்திப் பேருதவி புரிந்த ஆதிவராகம்" என்கிறார். இத்தகைய பாராட்டாளர் ஒருபால்:

பதிப்புரை :

"எமக்கு நீர் தாமோ தரர்?” என்று இடித்தாரும் இருந்தனர். இவர்தம் பதிப்புரையைப் 'பதிப் புரை' எனப் பிரித்துப் பதிக்கச் செய்யும் குற்றம் என்று பொருள் உரைப்பாரும் இருந்தனர். 'நும் குழறு படை விரிப்பில் சாலப் பெருகும்' எனப் பழிப்பாரும் இருந்தனர். இவற்றையெல்லாம் வாயளவில் கூறியமையாமல் அச்சிட்டு நிலைப்படுத்தினாரும் இருந்தனர் (திராவிடப் பிரகாசிகை 31-46) இத்தகைய பழிப்பாளர் ஒருபால்!

"இருவேறு உலகத்து இயற்கை" என அறிந்தவரும், சால்பின் கொள்கலமாய் இலங்கியவரும், பணிவுக்கோர் அணிகலமாய் அமைந்தவருமாகிய தாமோதரர் இவற்றைப் பற்றிய விருப்பு வெறுப்பு இன்றித் தம் அயராப் பணியிலேயே ஊன்றிச் செயற்கரிய செய்யும் செம்மலாகத் திகழ்ந்தார்.