உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

இளங்குமரனார் தமிழ் வளம்

228

அறிவுத் துணையாக மட்டுமல்லாமல் நாயகர் குடும்பப் பிணைப்பமைந்த தந்தையார் போலவும் அமைந்தார். அவர்தம் துணைவியார் தம் மகவாகவே அடிகளைப் புரந்தார். நாயகரும் அடிகளும் ஓரிரு நாள்கள் காணாவிடினும் தாங்க ஒண்ணாராய் நான் முந்தி நீ முந்தி என இல்லந் தேடிவந்து விருந்து உண்டு விரும்புவ பேசிச் சென்றனர். கூட்டங்களுக்கும் கோயில்களுக்கும் இணைந்தே செல்வதுடன் இணைந்தே பொழிவும் ஆற்றினர். நாயகரும் அடிகளும் உருவும் நிழலுமென இயைந்து இந்நிலை நெடிது செல்ல வாய்க்கவில்லை.

நாயகர் மறைவு :

நாயகர் 22-2-1901 இல் இயற்கை எய்தினார். தாயாய் தந்தையாய் -தனிப் பேராசிரியராய் - தாழா நண்பராய் தாங்குதலாய் இருந்த நாயகர் பிரிவு அடிகளாரை அசைத்தது; உலுக்கியது; உருக்கியது. ஊனும் உளமும் உணர்வும் நெகிழ அழுது தேம்பினார் அடிகள். அழுகை வாட்டாகியது; உணர்வாளர் அழுகையும் அரற்றும் அவலமும் பாட்டாதல் புதுவன அல்லவே! பண்டுதொட்டு வரும் 'கையறு நிலை யும் இரங்க'லும் இவைதாமே! அடிகளார் அழுங்கல் 'சோமசுந்தரக் காஞ்சி' ஆயது.

சோமசுந்தரக் காஞ்சி :

காஞ்சியாவது நிலையாமை. நில்லாத்தன்மை அமைந்த உலகியலைச் சொல்லும் திறத்தால் சொல்லி, நிலைபெறு செயலைச் செய்யத் தூண்டுவது காஞ்சியின் உட்கிடை நாயகர் மறைந்த பதினாறாம் நாள் 'நீத்தார் கடன்' நிகழ்ந்தது. அவர்தம் இல்லில் அறிஞர் பெருமக்கள் ஆற்றொணாத் துயரால் கூடிய அவையில் 'காஞ்சி' பாடப்பட்டது. அடிகள் வாய் சொன்மழை பொழிய, கண், கண்மழை பொழிந்தது; அவையும் கண்மழை பொழிய அவலப் பெருக்காயது' சார்ந்ததன் வண்ணமாதல் என்னும் சிவனியக் கொள்கை சீருற விளக்கமாகிய நிகழ்ச்சியாயிற்று அது.

காஞ்சி நூல் வடிவம் பெறவேண்டும் என அன்பரும் ஆர்வலரும் அவாவினர், நூலும் ஆயிற்று. 'பழம் புலவர் பாவன்ன செறிவும் செப்பமும் இயற்கை நவிற்சியும் அமைந்தது காஞ்சி" எனப் பெரும் பெரும் புலவர்களும் பாராட்டினர். எனினும், புலமைக் காய்ச்சல் என்பது ஒன்று உண்டே! நல்லன விடுத்து அல்லனவே தேடி அதையே முன்வைத்து அலைக்