உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 22.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல்லவபுரம் :

6. தென்றல் உலா

கல்லூரிப் பணியில் இருந்து விலகிய அடிகளார் வாழ்விடம் சென்னையில் இருந்து பல்லவபுரத்திற்கு மாறியது. அங்கே ஒரு மனையிடத்தை 22-2-1911 இல் விலைக்கு வாங்கினார். 1-5-1911 இல் ஆங்கொரு வீட்டை வாடகைக்கு அமைத்துக் கொண்டு தாம் விலைக்கு வாங்கிய மனையிடத்தில் கட்டடம் கட்டத் தொடங்கினார். அக் கட்டடமே அடிகளார் கண்ட 'பொது நிலைக் கழக' மனையாயிற்று.

அடிகளார் கொண்டிருந்த சமயப் பற்றும், மெய்ப்பொருள் ஆய்வும் பண்டைத் தமிழர் மேற்கொண்டிருந்த மனையோடு வாழ்ந்து, மக்களோடு விளங்கி, சிறந்தது பயிற்றி, துறவினை மேற்கொள்ளும் நெறியைக் கடைப்பிடியாகக் கொள்ளத் தூண்டின. பேராசிரியப் பணி நீக்கம் இதற்குத் தக்க வாய்ப்பாக அமைந்தது. அடிகளார் 27-8-1911 இல் தம் முப்பத்து ஐந்தாம் அகவையில் துறவு கொண்டார் அவர் தம் பின்னால் துறவுநிலை கொண்டு முன்னரே அடிகள் என நாம் வழங்கினாலும் அவர் அடிகள் நிலைகொண்டது, இந்நாள் முதலேயாம்.

அடிகளார் நாகையிலிருந்து சென்னைக்கு வருமுன்னரே மணம் செய்திருந்தமையும் சிந்தாமணி என்னும் மகவு பிறந்திருந்தமையையும் அறிந்துளோம். தம் மனைவியுடனும் அம் மகவுடனும் சென்னைக்கு வத்த அடிகளார் குடும்பம் துறவு மேற்கொள்ளுதற்கு முன்னர்ப் பெரிய குடும்பம் ஆயிற்று.

1903 இல் நீலாம்பிகையும், 1904இல் திருஞான சம்பந்தரும், 1906இல் மாணிக்கவாசகரும், 1907 இல் திருநாவுக்கரசும், 1909 இல் சுந்தரமூர்த்தியும், 1911 இல் திரிபுர சுந்தரியும் பிறந்தனர்.