உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர் பொன் மொழிகள்

291

இரண்டே தமிழுக்கு வேண்டிய எழுத்துத் திருத்தமாம். குகர நெடிலை மேற்சுழிக்கலாம்.

ஏட்டுச் சுரைக்காய்

த.இ.வ.318.

பொதுமக்கள் நூற்றுமேனி எழுபத்தைவர்க்குக் குறையாது தாய்மொழியில் எழுதப் படிக்கத் தெரிந்தவராயிருத்தல் வேண்டும். அவரால் சட்ட சபைக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர் பள்ளியிறுதி (S.S.L.C.)யளவேனும் படித்திருத்தல் வேண்டும். அமைச்சரா யிருப்போர் பட்டந் தாங்கியராகவும் தத்தம் வாரியத்துறையில் தேர்ச்சி பெற்றவராகவும் இருத்தல் வேண்டும். அல்லாக்கால், குடியரசென்பது ஏட்டுச் சுரைக்காயாகவே இருக்கும். ம.வி.35. ஏழையர்க்குப் பொலக்கொடை

தங்கக் கட்டுப்பாட்டினால் நடுவணரசு தொகுத்துள்ள குன்று போன்ற பொற்குவையினின்று தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒவ்வோர் ஏழைப் பெண்ணிற்கும் காதணியும் கழுத் தணியுமாக மும்மூன்று சேரை (Pound) நல்கின் மிக நன்றாம்.

ஏழைப்பெண்டிர்க்குப் பொன்னளிப்பதைச்சிலர் நெறி திறம்பியதாகக் கருதலாம். நிலம் மிக்கவரிடமிருந்து பெற்ற மிகை நிலத்தை நிலமில்லாதவர்க்குப் பகிர்ந்து கொடுப்பது போன்றதே பொலம் (பொன்) மிக்கவரிடமிருந்து பெற்ற மிகைப் பொலத்தைப் பொலமில்லாத பெண்டிர்க்குப் பகிர்ந்து கொடுப்பதும். ம.வி.79. ஒப்புயர்வற்ற தமிழர்

இற்றைத் தமிழருட் பெரும்பாலாரும் தம்மைத் தாமே தாழ்த்துவதிலும், இனத்தாரைப் பகைத்துப் பகைவரை வாழ வைப்பதிலும், பகைவர் மனங்குளிரத் தம் முன்னோரைப் பழிப் பதிலும், தம்மருமைத் தனிமொழியைப்புறக்கணித்துப் பகைவரின் அரைச்செயற்கைக் கலவை மொழியைப் போற்று வதிலும் ஒப்புயர்வற்றவராய் உழல்கின்றனர். த.வ.மு.1.

கடவுள் உண்மை

உலகில் எத்துணை நாகரிகப் பண்பாட்டு நாடாயினும் இரவில் நகர விளக்கு அரைமணி நேரம் எரியாது போயினும், ஐந்து நிமையம் அரசன் அதிகாரம் இல்லாது போயினும் காட்டு விலங்கினும் கேடாக நாட்டு மக்கள் நடந்துகொள்கின்றனர். அங்ஙனமிருக்க, உயிரற்ற பன்னிரு கோள்களும் பற்பல நாண் மீன்களும் இடைவிடாது பெருவெளியில் ஒழுங்காய் இயங்கி வருவது இயக்குவான் ஒருவனின்றி இயலுமா? கடவுளுண் மையைக் காட்ட இதுபோல் வேறு சான்றுகள் எத்துணையோ இருப்பினும் இஃதொன்றே போதுமாம். த.இ.வ.318.