உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆராய்ச்சி முன்னுரை

சொல்லும் ஒன்றனை அழகுபடச் சொல்வது மட்டுமன்றிப், பயன் மிக்கதாகவும் சொல்ல வேண்டுமானால் உவமையைக் கையாளுதல் வேண்டும் என்பது அறிவறிந்த சான்றோர் உரை.

தொல்காப்பியத்தில் 'உவம இயல்' என்பது ஓர் இயல். அவ்வுவமை, உரைநடையினும் செய்யுட்கு மிகவேண்டத்தக்கது என்பாராய்ச், செய்யுளியலுக்கு முற்பட அதனை வைத்தார். ஆயினும், உரைநடையிலும் அவ்வுவமையின் பயன்பாடும் அழகும் பெரிதாம்.

உவமையும் பொருளும் ஒத்தல் வேண்டும் என்று கூறும் தொல்காப்பியர்,

'உயர்ந்ததன் மேற்றே உள்ளுங்காலை' எனவும் முற்படக் கூறியுள்ளார். முன்னது, உவமையின் ஒப்பாந்தன்மையையும், பின்னது, உவமையின் உயர்வாந்தன்மையையும் உரைப்பன.

உவம இயல் முகப்பில் உவமம் என்பது ஒரு பொருளோடு ஒரு பொருளினை ஒப்புமை கூறுதல் என்பார் பேராசிரியர். இளம்பூரணர் அம்முகப்பில், புலன் அல்லாதன புலனா தலையும் அலங்காரமாகிக் கேட்டார்க்கு இன்பம்பயத்தலையும் எடுத்துரைப்பார்.

வினை (தொழில்), பயன், மெய் (வடிவம்), உரு (நிறம்) என்னும் நான்கு கருத்து வகையாலும் உவமை தோன்றும் என்பர். ஓர் உவமையிலேயே இந்த நான்கும் இடம் பெற்றிருக்க வேண்டும் என்பது இல்லை. ஒன்று இடம் பெற்றிருப்பினும் உவமையேயாம். இதனைப் புலியன்ன மறவன் என்பது வினையுவமம்; அது பாயுமாறே பாய்வன் என்னும் தொழில்பற்றி ஒப்பித்தமையின். அற்றன்றித் தோலும் வாலும் காலும் முதலாகிய வடிவும் ஏனைவண்ணமும பயனும் ஒவ்வா என்பது எனவரும் பேராசிரியர் விளக்கத்தால் அறியலாம்.