உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. தமிழ்

தமிழ்மொழி

தமிழ், உலகின் முதன்முதல் தானே தனியாகத் தோன்றிய மொழியாதலால் நீண்ட காலமாகச்சிறப்புப் பெயரின்றி மொழி என்னும் பொதுப் பெயராலேயே வழங்கிவந்தது. ஓர் ஊரில் ஒரே ஆறு இருப்பின் ஆற்றிற்குப் போய்வந்தேன் என்றே சொல்வர். அதுபோல் ஒரே மரமிருப்பின் மரத்தடிக்குப்போ என்றே சொல்வர். இங்ஙனம் தமிழும் தமிழகத்தில் ஒரே மொழியாய் இருந்ததனால் மொழியொன்றே முதலில் வழங்கிற்று.

ஆறும் மொழியும்

தமிழர் வ. 92

ஒரு நாட்டில் ஒரே மொழி வழங்குமாயின் அதற்குச் சிறப்புப் பெயர் தோன்றாது. பேச்சு அல்லது மொழி என்னும் பொதுப் பெயரே அதற்கு வழங்கும். ஓர் ஊரில் ஒரே ஓர் ஆறிருப்பின் அதை ஆறென்று பொதுப்பெயராலேயே குறிப்பர். இங்ஙனமே மலை குளம் மரம் முதலிய பிறவும் ஒன்றேயொன்றாயிருப்பின் பொதுப்பெயராலேயே குறிக்கப் பெறும். த.வ. முன். 37

தாயும் தாய்மொழியும்

ஒரு மரத்தில் சிறு கிளைகட்கு நேர் இயைபு இன்றேனும் அவற்றைத் தாங்கும் பெருங்கவைகட்கு, அடிமரத்துடன் நேர் இயைபு இருப்பதுபோல, உலகமொழித் தொகுதிகட்குள் சிறு பிரிவுகட்கு நேர் இயைபின்றேனும் அவற்றிற்கு மூலமான பெரும் பிரிவுகட்கு நேரியைபு திட்டமாயுள்ளதாம். எல்லாக் கிளைகட்கும் மூலமான ஓர் அடிமரம் இருப்பதுபோல எல்லா மொழிகட்கும் மூலமான ஒருதாய்மொழியு மிருத்தல் வேண்டும். உலகத்திலுள்ள மக்களெல்லாம் ஒரு தாய்வழியினராதலின் அவர் வழங்கும் மொழிகளும் ஒருதாய் வயிற்றுவழியினதாதல் வேண்டும்.

மொழியாராய்ச்சி. செ. செ. 9.275