உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர் உவமைகள்

கறந்த பாலைக் காம்புக் கேற்றல்

327

திராவிடம் என்னும்சொல் முதலாவது தமிழையே குறித்த தென்றும், நாலாயிரத் தெய்வப் பனுவல் திராவிட வேதமென்றும், மெய்கண்டான் நூலுக்குச் சிவஞான முனிவர் வரைந்த அகலவுரை திராவிட மாபாடியம் என்று பெயர் பெற்றுள்ளது வென்றும், தனித் தமிழாராய்ச்சியில்லாத பண்டை நிலைமையைக் கூறி, தமிழ் நாட்டையும் பிரிந்துபோன திராவிட நாடுகளையும் ஒன்றாய் இணைக்க முயல்பவர் கறந்த பாலைக் காம்பிற்கு ஏற்றுபவரேயாவர். ஆயின், அரசியற் கொள்கை ஒப்புமைபற்றி, தமிழ்நாடும் திராவிட நாடுகளும் ஒருவட்டாட்சி அமைக்கலாம்.

பால் தயிராதல்

த.வ.29

பால் பிரைக் கலப்பால் தயிராகத் திரிவது போல், திராவிட மொழிகளும் வடசொற்கலப்பாலும், வல்லொலியாலும் அரை யாரிய வண்ணமாக மாறிவிட்டன. தயிர் மீண்டும் பாலாகாதது போல் திராவிடம் மீண்டும் தமிழாகா. இ.த.எ.கெ.36

தயிர் பாலாகாது

தியூத்தானியம் (Teutonic) என்னும் ஒரே வகுப்பைச் சேர்ந்த செருமானியம் தச்சம் (Dutch) ஆங்கிலம் முதலிய மொழிகள் எங்ஙனம் திரும்ப ஒன்று சேராவோ அங்ஙனமே தென்மொழியம் என்னும் வகுப்பைச் சேர்ந்த தமிழும் திரவிடமும் ஒன்று சேரா பால் திரிந்து தயிரானபின் மீளப் பாலாகாததுபோல், தமிழ் திரிந்து திரவிடமானபின் மீளத் தமிழாகாது. ங்கு மொழிகட்குச் சொன்னது நாடுகட்கும் ஒக்கும். த.வ.முன்.29

காசி காஞ்சித் தொடர்பு

வங்க நாட்டில் திரவிடரேயன்றித் தமிழர் ஒருகாலும் வாழ்ந்திராமையானும், இற்றை வங்கமொழி ஆரியவண்ணமாய் மாறியிருத்தலானும், தமிழ் என்னுஞ் சொற்குத் தம்ரலித்தி என்னுஞ் சொல்லோடுள்ள தொடர்பு காசி என்னும் பெயர்க்குக் காஞ்சியென்னும் பெயரோடுள்ள தொடர்பே யாதலானும்; தம்ரலித்தி (அல்லது தமிலப்தி அல்லது தமிலூக்) என்னுஞ் சொல்லினின்று தமிழ் என்னும் பெயர் வந்ததென்பது சிறிதும் பொருந்தாது. த.வ.முன்.34