உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டிநாட்டுப் புலவர்கள்-2

89

பேரும் புகழும் பரவின. அதே அளவுக்குத் தீயவர்களால் பகையும் கேடும் பல்கின. அறத்திற்குத் தலைவணங்கத் துணிந்தவர்க்கு அச்சம் உண்டா?

ஒட்டப்பிடாரத்தில் தலைமைக் காவலர் ஒருவர் இருந்தார். கொடுமைக்கு ஒரு வடிவம் காட்ட வேண்டுமானால் அவரையே காட்டிவிடலாம் என்னும் நிலைமையில் கொடுமையானவர். அவர் கொடுமையை எதிர்க்கத் துணிந்தவரும் உலகில் உண்டு அல்லவா! ஆதலால் அவரைக் கொன்றொழித்தனர். 'கொன்றவர் யார்?' என்பதை எவ்வளவு முயன்றும் கண்டறிய முடியவில்லை. குற்றமற்ற ஒருவர் குற்றவாளியாக்கப் பெற்றார். அவருக்காக வழக்காட எவரும் முன்வரவில்லை. எவரும் எதிர்பாராத நிலையில் சிதம்பரனார் நீதிபதிமுன் தோன்றி வழக்காடினார். பொய் வழக்கு நிற்கமாட்டாமல் ஒழிந்தது. தூக்கேற நின்றவரின் உயிர் காக்கப்பெற்றது.

குற்றமற்றவர் விடுதலை செய்யப் பெற்றார் என்று குற்றம் சாட்டியவர் மகிழ்வரா? விடுதலை செய்ய வழக்காடிய சிதம்பரனார் மேல் ஒரு பொய் வழக்குப் போட்டனர். வழக்குப் போட்டவரின் பொய்யை உடைத்தெறிந்தார் சிதம்பரனார். அதற்குமேல், காவல் துறைக்குச் சிதம்பரனார் மேல் ஓர் அச்சம்! நீதிபதிகளுக்கும் ஒரு நடுக்கம்!

சிதம்பரனார் வழக்கறிஞர் ஆனவுடன் திருமண ஏற்பாடும் நடைபெற்றது. திருச்செந்தூரில் சுப்பிரமணியபிள்ளை என்பவர் ஒருவர் இருந்தார். அவர் திருமகளார் வள்ளியம்மை என்பார். அவரே நம் சிதம்பரனார் வாழ்க்கைத் துணை ஆனார்.

மனைவியர்க்கு எல்லாம் 'வாழ்க்கைத் துணை' என்னும் பெயர் இருப்பினும் மிகச்சிலரே உண்மையாக வாழ்க்கைத் துணையாக அமைபவர். அத்தகையவருள் ஒருவராக அமைந்தார் வள்ளியம்மையார்.

சிதம்பரனார், குடும்ப வாழ்க்கை, தொழில் வாழ்க்கை, நாட்டு வாழ்க்கை, மொழி வாழ்க்கை எனப் பல்வேறு வாழ்வில் ஈடுபட்டவர். ஆனால் ஒன்றில் இருந்து ஒன்று பிரித்துக் காண முடியாமல் அமைந்த பெருவாழ்க்கையுடையவர். அதனால் எவரும் அவரைத் தேடி வருவர்; எப்பொழுதும் வருவர்; நிலைத்துத்