உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டிநாட்டுப் புலவர்கள் - 2

91

"தொட்டால் தீட்டு; கண்ணில் பட்டாலும் தீட்டு" என்று இருந்த நாளையில் வள்ளியம்மையார் கூறிய வாய்மொழி இது. வாய்மொழிப் படியே வாழ்ந்தும் காட்டினார். அவரைத் தெய்வம் என்பதை அன்றி என்ன சொல்வது? அத் தெய்வம் 1900 இல் ஒடுங்கியது.சிதம்பரனாரை அஃது எப்படி ஒடுக்கியிருக்கும் என்பதைக் கூறவும் வேண்டுமோ?

நாட்டுக்குக் கப்பலோட்ட வந்த சிதம்பரனார் வீட்டுக் கப்பல் அலைக்கழிந்தது. பின்னர், வள்ளியம்மையார்க்கு நெருங்கிய உறவினர் - அவர் தன்மைகளே உருக்கொண்டவர் ஆழ்வார் திருநகரியைச் சேர்ந்தவர் - ஆகிய மீனாட்சியம்மையார் சிதம்பரனார் மனையறத்தை மாண்புறத் தாங்கும் இரண்டாவது மனைவி ஆயினார்.

விடுதலை வேட்கையுடைய சிதம்பரனார் ஒருமுறை சென்னைக்குச் சென்றார்.அப்பொழுது விவேகானந்தர் திருமடத்தில் இராமகிருட்டிணானந்தர் என்பவரைக் கண்டார். அவர் "நாட்டுக் கைத்தொழில் வளர்ச்சிக்கும், புதிய புதிய தொழிலாக்கத்திற்கும் நீர் என்ன செய்தீர்?" என்று வினாவினார். "நாட்டுத் தொழில் வளர்ச்சியே நன்மையை அளிக்கும்; இதுவே எம் கொள்கை" என்றும் கூறினார். அவர் எழுப்பிய வினாவும், விளக்கமும் வீரர் சிதம்பரனாரை மிக எழுப்பியது. அதனால் அவர் தம் வாழ்வையே நாட்டுப் பணிக்கு ஒப்படைத்தார்.

தூத்துக்குடிக்கு வந்து சேர்ந்தார் சிதம்பரனார். “தரும சங்க நெசவு சாலை", "சுதேசிய நாவாய்ச் சங்கம்","சுதேசியப் பண்டக சாலை" என்னும் மூன்று அமைப்புகளை நிறுவினார்.

வாணிகம் செய்வதற்காக இந்திய நாட்டுக்கு வந்து, ஆட்சியாளராக மாறிய ஆங்கிலேயர், சிதம்பரனார் ஏற்பாடுகளை விரும்புவரா? தம் அரசையும், வணிகத்தையும் ஒழிப்பதற்காகச் செய்த ஏற்பாடுகள் என எண்ணி வெதும்பினர். அவற்றை ஒழிப்பதற்காக என்னென்ன வழிகள் உண்டோ அவ்வளவும் செய்தனர். அவர்களுடன் போரிட வேண்டியது ஒருபக்கம்!

அடிமை வாழ்வில் பழகிப் போனவர்களும், ஆங்கிலேயர் களுக்கு அஞ்சி அஞ்சி ஒடுங்கிப் போனவர்களும் ஆகிய, இந்நாட்டு மக்களைத் தட்டி எழுப்பித் தம் வழிக்குக் கொண்டு வருவதிலே எடுத்துக் கொள்ள வேண்டிய பெரு முயற்சி ஒருபக்கம்!