உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டிநாட்டுப் புலவர்கள் - 2

93

உட்பகை உண்டாகியது. ஒழிக்கத் திட்டமிட் அரசின் பகையும் வலுத்தது. அயலரசின் கொடுமையையும் அடக்கு முறையையும் அஞ்சாமல் கூட்டங்களில் எடுத்துரைத்தார் சிதம்பரனார். குறிப்பெடுத்தனர் அரசினரின் ஒற்றர்கள். சூரத்தில் நடந்த காங்கிரசு மாநாட்டுக்குச் சென்றார் சிதம்பரனார். அதில் முற்போக்குக் கட்சியைச் சேர்ந்த பெருவீரர் திலகருக்கு வலக்கையாக விளங்கினார். விடுதலைக் கவிஞர் பாரதியாருடனும், வீரத் துறவி சுப்பிரமணிய சிவாவுடனும் தொடர்பு கொண்டார். தடை விதிக்கப்பெற்ற விபினசந்திரபாலர் விழாவைக் கொண்டாடினார். திருநெல்வேலியில் 'தேசாபிமானச் சங்கம்' தோற்றுவித்தார். தூத்துக்குடி கோரல் ஆலைத் தொழிலாளர் வேலை நிறுத்தத்தின்போது அவர்களுக்குப் பேருதவி புரிந்தார்! இவ்வளவும் ஆங்கிலேயர்க்கு இடிமேல் இடியாகத் தோன்றின. இந்திய நாட்டை விட்டு ஓட்டுவதற்குத் திட்டமிட்ட செயலைக் கண்டால் அவர்களுக்கு இடியாகத் தோன்றாதா என்ன?

சிதம்பரனாரும் சிவாவும் தன்னை வந்து காணுமாறு நெல்லை மாவட்ட ஆட்சியாளன் விஞ்சு என்பான் ஆணை யிட்டான். சென்றவர்கள்மேல் வழக்குத் தொடரப் போவதாகச் சொல்லிச் சிறைப்படுத்தினான்! நெல்லை மாநகர் கொதித்தது! காவல் நிலையம் எரிந்தது! மாவட்ட நீதிபதி ஓடித் தப்பினார்! அரசினர் அலுவலகங்கள் தாக்கப்பெற்றன! விஞ்சு, காவற்படையை ஏவினான்! சுட்டுத்தள்ள ஆணை தந்தான். நால்வர் இறந்தனர்! பலர் காயமுற்றனர்; நகரம் வேட்டைக் காடு ஆகியது.அரச நிந்தனைக் குற்றவாளி ஆக்கப்பெற்றார் சிதம்பரனார்.

>

'பின்னி' என்பான் நெல்லை மாவட்ட நீதிபதி, சிதம்பரனார்க்கும் சிவாவுக்கும் தனித்தனி ஆயுள் தண்டனையும், சிவாவுக்குத் துணை நின்ற குற்றத்திற்காகச் சிதம்பரனார்க்கு மேலும் ஓர் ஆயுள் தண்டனையும் வழங்கினான். அவ்வழக்கு உயர் நீதிமன்றம் செல்ல, சிதம்பரனார்க்கு ஆறாண்டு நாடு கடத்தல் தண்டனையும், சிவாவுக்குத் துணை நின்றதற்கு நான்காண்டு நாடுகடத்தல் தண்டனையும் தந்து இரண்டு தண்டனைகளையும் ஒரே காலத்தில் அடைய வேண்டுமென்றும் முடிவாயிற்று. அதன் பின்னர் உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றதன் பயனாக ஆறாண்டுக் கடுங்காவலாக மாற்றப்பெற்றது. பாளையங்கோட்டைச் சிறையிலே வைக்கப்பெற்றார் சிதம்பரனார்.