உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. கோவைகிழார் இராமச்சந்திரன் செட்டியார்

சங்க காலத்திலே அரிசில் கிழார், ஆலத்தூர் கிழார், ஆவூர் கிழார், கோவூர் கிழார் எனப் பெயர் பெற்றுப் புவவர் பலர் விளங்கினார்கள். அவர்களைப்போல் இருபதாம் நூற்றாண்டில் விளங்கிய புலவர் ஒருவர் கோவை கிழார் ஆவர்.

அரிசில் கிழார், அரிசில் என்னும் ஊரினர். அவ்வாறே ஆலத்தூர், ஆவூர், கோவூர் ஆகிய ஊரினர் மற்றைப் புலவர்கள். நம் கோவை கிழார் கோயமுத்தூர் எனப்பெறும் 'கோவை'யைச் சேர்ந்தவர் ஆவர்.

கிழார் என்பது உழவுத் தொழிலில்

ஈடுபட்ட பெரியவர்களைக் குறிக்கும்; அப் பெயர் வணிகர்களைக் குறித்த வழக்கும் உண்டு. அம் மரபுப்படியே, உழவும் வணிகமும் ஒருங்கே பேணிய குடும்பத்தில் வந்தவர் கோவை கிழார்.

கோவை கிழாரின் இயற்பெயர் இராமச்சந்திரன் செட்டியார் என்பது. இராமச்சந்திரனார் தம் புலமையாலும், தொண்டாலும் கோவை ஆனார்; கோவை இராமச்சந்திரனார் ஆயிற்று. கோவைகிழாரின் அன்புரிமை அத்தகையது.

கோவையில் வாழ்ந்த மருதாசலம் செட்டியார், கோனம்மாள் என்பவர்களின் தவப்புதல்வராக இராமச் சந்திரனார் தோன்றினார். அவர் தோன்றிய நன்னாள் 30-11-1888 (சர்வதாரி ஆண்டு கார்த்திகைத் திங்கள் 19ஆம் நாள்.)

இராமச்சந்திரனாரின் தொடக்கக் கல்வி நகரவைத் தொடக்கப் பள்ளியிலே தொடங்கியது. ஈராண்டுகளில் முதலிரண்டாம் வகுப்புக்களில் தேர்ச்சியடைந்தவர், நேரே நான்காம் வகுப்புக்கு உயர்த்தப் பெற்றார். பள்ளியில் படித்த பொழுதுபோக மற்ற நேரங்களில் வீட்டில் தனியேயும் ஓர் ஆசிரியரிடமும் பயின்றார். ஆதலால், இளம் பருவத்திலேயே நல்லறிவு பெற்றுச் சிறந்தார்.