உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

இளங்குமரனார் தமிழ்வளம் - 24

1899ஆம் ஆண்டில் இலண்டன் மிசன் பள்ளியில் சேர்ந்து பயின்றார். 1904இல் பள்ளி இறுதித் தேர்வில் (மெட்ரிக்குலேசன்) வெற்றி பெற்றார். இதற்கு இடையே 1903இல் கோவை வட்டாரத்தில் பிளேக் என்னும் கொள்ளைநோய் வந்து மக்களை வாட்டியது. அதனால் மருதாசலனார் தம் குடும்பத்தோடு வேற்றூருக்குச் சென்றார். பல இடங்களுக்கும் திருக்கோயிலுக்கும் சென்று இராமேசுவரம் போய்ச் சேர்ந்தார். அங்கே கிழக்கிந்தியத் தீவுகளில் வழங்கும் நாணயம் ஒன்று இராமச்சந்திரனார்க்குக் கிடைத்தது. அஃது அவர்தம் வரலாற்று ஆராய்ச்சிக்கு வித்திட்டது.

1906ஆம் ஆண்டில் இடைநிலை வகுப்பில் தேறினார். பின்னர்ச் சென்னைக்குச் சென்று மாநிலக் கல்லூரியில் சேர்ந்து (பி.ஏ) இளங்கலைப் பட்டம் பெற்றார். இளங்கலையில் பயின்று கொண்டிருந்தபொழுதிலேயே திருமண ஏற்பாடு நடந்தது. அங்கண்ண செட்டியார் என்பவரின் திருமகளார் செல்லம்மாள் இராமச்சந்திரனாரின் வாழ்க்கைத் துணைவியர் ஆனார். திருமணம் முடிந்ததாயினும் மேற்கல்வி தடைபட்டுவிடவில்லை. சென்னை, சட்டக் கல்லூரியில் சேர்ந்து பயின்று 1912ஆம் ஆண்டில் பட்டமும் பெற்றார். அதன் பின்னர்க் கோவைக்கு வந்து வழக்கறிஞர் தொழிலை மேற்கொண்டார்.

இராமச்சந்திரனார் இளமையிலேயே தமிழின்மேல் ஆர்வம் கொண்டார். திருச்சிற்றம்பலம் பிள்ளை, சபாபதிப் பிள்ளை என்பவர்களிடம் தமிழ் இலக்கிய இலக்கண நூல்களை முறையே பாடம் கேட்டார். சென்னையில் படித்த காலத்தில் இவருக்குத் தமிழ் அறிஞர் பலர் தொடர்பு வாய்த்தது. குறிப்பாகத் தமிழ்ப் பேரறிஞர் உ.வே. சாமிநாதையர் தொடர்பு உண்டாயிற்று. அத்தொடர்பு இயல்பிலே கொண்டிருந்த மொழிப்பற்றையும் ஆராய்ச்சித் திறத்தையும் மேலும் வளர்த்தது. இவர் தமது பொழுதில் பெரும் பகுதியை மொழி ஆராய்ச்சியிலேயும் வரலாற்றுக் குறிப்புக்களைத் தொகுப்பதிலேயும் செலவிட்டார்; கவிதை இயற்றுவதிலும் திறமை பெற்றார்.

இராமச்சந்திரனார் மொழிப்புலமை தமிழுடன் நிற்கவில்லை. ஆங்கிலம், வடமொழி, தெலுங்கு, கன்னடம், இந்தி, உருது, மலையாளம் ஆகிய மொழிகளையும் பயின்றார். பல்வேறு மொழி மாநாடுகளில் கலந்து கொண்டு அவ்வம் மொழியிலேயே உரையாற்றினார். இத் திறம் அரிதாக வாய்க்கப்பெறுவதே ஆகும்.