உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொங்கு நாட்டுப் புலவர்கள்

109

இவர் எல்லோரிடத்தும் இனிமையாகப் பேசுவார். இவரிடமிருந்து யாரும் கடுஞ்சொல் கேட்டிருக்கமாட்டார்கள். தம்மால் பிறர்க்கு ஒரு துன்பம் வருவதை இவர் பொறுத்துக் கொள்ளமாட்டார். இவர் தம் கீழ் வேலை செய்த யார் மேலும் ஒரு முறையும் நடவடிக்கை எடுத்ததில்லை என்பது இவரைப்பற்றிப் பலர் புகழ்ந்து கூறும் உரைகளுள் ஒன்று. எவரையும் எளிதில் நம்பிவிடும் இயல்பினர் இவர். தமக்கு ஒரு பதவி வேண்டும் என்பதற்காக ஒரு பொருளையும் எதிர்பார்க்கமாட்டார். தம்மிடம் வருந்தி வந்தவர்களுக்கு வேண்டியதைக் கொடுப்பார். சிறப்பாகக் கல்வியின் பொருட்டு வரும் ஏழை மாணவர்க்குப் பிறரை இரந்தும் உதவி செய்வார். தம் மக்களிடம் செலுத்தும் அன்பைக் காட்டிலும் மாணவர்களிடம் அதிக அன்பு செலுத்துவார். புத்தகங்களை உயிரினும் மேலாகப் போற்றுவார். புத்தகங்கள், பத்திரிகைகள், நோட்டுகள், கடிதங்கள் எல்லாம் ஆண்டு, மாதம், நாள் வரிசைப்படி அட்டைகட்டி ஒழுங்காக அடுக்கப்பட்டிருக்கும். பல ஆண்டுகளுக்குமுன் நடந்த ஒரு நிகழ்ச்சி எழுதப்பட்ட இதழ்களை மிக எளிதில் கண்டுபிடித்து எடுத்துவிடலாம். அவ்வளவு முறையாக அவை அடுக்கப்பட்டிருக்கும். பொதுவாக எளிமை, இனிமை, கனிவு, உழைப்பு, உதவி - இவையே கோவை கிழாரின் உருவம் என்றால் அது மிகையாகாது."

கோவை கிழாருக்கு மக்கள் அறுவர் உளர். மகளார் ஒருவர்; மற்றையவர் ஆடவர். அவருள் முதல் மகனார் திரு. கிருட்டிணமூர்த்தி என்பவர் சென்னை நகரில் நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றுள்ளார். இரண்டாவது திருமகனார் மகாதேவன் என்பார் பொறி இயலராக இருக்கின்றார். ஏனையோர் கோவையில் தொழில் துறையில் ஈடுபட்டுச் சிறப்புற வாழ்கின்றனர். அவர்தம் அருமை மனைவியார் 1965இல் இயற்கை எய்தினார்.

தென்னாடும் வடநாடும் ஒருங்கே சுற்றியவர் கோவை கிழார். ஈழநாட்டிற்கு ஆறுமுறை போய் வந்துள்ளார். அச் செலவு குறித்து மூன்று நூல்கள் இயற்றினார். அவற்றில் 'கடலின்கண் முத்து' என்பது கழக வெளியீடு.

"தொண்டர்தம் பெருமை சொல்ல ஒண்ணாதே" என்பது ஒளவையார் மொழி. சீரிய தொண்டராம் கோவை கிழாரை மதிப்புமிக்க பட்டங்கள் பல தேடிவந்தன. 1930ஆம் ஆண்டில் 'இராவ் சாகிப்' என்னும் பட்டத்தையும், 1938 ஆம் ஆண்டில்