உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124

இளங்குமரனார் தமிழ்வளம் - 24

அமர்ந்து உணர்த்த, ஓதாது உணர்ந்தார்! வள்ளலார் கற்ற கல்வியும் ஓதாக் கல்விதானே!

"பூவாமல் காய்க்கும் மரமுமுள; விதையாமலே முளைத்துப் பயன்தரும் வித்துகளும் உள. அவற்றைப்போல் ஓதாமலே உணரும் மேதையரும் உளர்' என்பர். இதற்குச் சான்றாக விளங்கியவர் வரதநஞ்சையர்.

வழிவழியாக வாய்த்தது ஊர்க்கணக்கு எழுதும் தொழில். அதற்குத் தக்கவாறு எண்ணும் எழுத்தும் குடும்பச் செல்வமாக வாய்த்தன. "குலவித்தை கல்லாமல் பாகம்படும்" என்பது பழ மொழியல்லவா! அதன் பின்னர்த் தாமே கற்றுப் புலமையுற்றார்.

தம் பன்னிரண்டாம் வயதுக்குள் பன்னிரு திருமுறைகளையும், சித்தாந்த நூல்களையும், தொல்காப்பியம், திருக்குறள்,பத்துப் பாட்டு, எட்டுத்தொகை முதலிய சங்க நூல்களையும், பிற்கால இலக்கண இலக்கியங்களையும் கற்றுத் தெளிந்தார் எனின், 'முன்னைப்பிறவித் தனிப் பயன்' அன்றோ! 'ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப்பு உடைத்து' என்றுதானே கொள்ளவேண்டும்?

இளைய வரதநஞ்சையர் தாமே பயில்வார்; பயிலுவதில் ஐயம் உண்டாயின் உறங்கப்போகுங்கால் அதனை எண்ணிக் கொண்டே கண்ணயர்வார். உறக்கம் நீங்கி எழும்போது ஐயம் நீங்கித் தெளிவுடன் எழுவார். அண்ணல் அறுமுகன் அருளிய அருளொளி அஃதென வாழ்த்துவார். அப்பருவத்திலே அறுமுகன்மீதும், அம்மைமீதும் பாடிய பாடல்கள் பல.

தமிழ்ப் புலமைமிக்க வரதநஞ்சையர் வடமொழியிலும், தெலுங்கிலும் தேர்ந்து விளங்கினார். தாய்மொழிப் புலமை கண்டே வியந்து மூக்கில் விரல்வைத்து நோக்கிய புலவர்கள் இதனைக் கண்டு பெருவியப்பில் ஆழ்ந்தனர். “வாங்கிவந்த வரம்” என்று வாழ்த்தினர்.

கணக்கராகிய இவர் கணியராகவும் (சோதிடராகவும்) திகழ்ந்தார். இசைக்கலை நாடகக்கலை ஆகியவற்றிலும் தேர்ச்சி யுற்றார். 'நடக்கும் பல்கலை நூல்நிலையம்' என்று பலரும் புகழும் பான்மையராக விளங்கினார்.

ஓதாது கற்ற இவர் கணக்கர் தொழிலுடன் ஓதும் தொழிலும் புரிந்தார். உடன்பிறந்தாராகிய கந்தசாமிப் பிள்ளைக்கு ஆசிரியராக விளங்கி அருந்தமிழ்க் கொடை புரிந்த வள்ளல் இவரே. இவர்தம்