உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. பண்டித அ. கந்தசாமிப் பிள்ளை

புலவரேறு அ. வரதநஞ்சைய பிள்ளை அவர்கள் உடன் பிறந்தவர் கந்தசாமிப் பிள்ளை என்பதை அறிவோம். அவரே பண்டித அ. கந்தசாமிப் பிள்ளை ஆவர்.அப்பாசாமிப் பிள்ளை பெற்ற மக்கள் இருவரும் குடிக்கு விளக்கமாக விளங்கினர்.

வரத நஞ்சையர் பிறந்து ஒன்பது ஆண்டுகள் ஆன பின்னர்க் கந்தசாமியார் பிறந்தார். இவர் பிறந்தது 1885ஆம் ஆண்டு செப்டம்பர்த் திங்கள் ஆகும்.

கந்தசாமியார் பிறந்த மறு ஆண்டிலே தந்தையார் இயற்கை எய்தினார். குடும்பத் தலைமகனார் வரதநஞ்சையர் தந்தையாரின் கடமையைத் தாங்கினார். அப்பொழுது அவர் தம் வயது பத்தேதான்.

தமையனை ஒரு தந்தை என்பர்! ஆசிரியரையும் அவ்வாறே தந்தை என்பர்! ஒரே வேளையில் இரு தந்தையர் பொறுப்பையும் தாங்கி அரவணைத்தார் வரதநஞ்சையர். இளவல் கந்தசாமி "அண்ணன் இருக்க எனக்கு என்ன குறை?" என்பார் போல வளர்ந்தார்.

மூன்றாம் வயதிலே கண்டமாலை என்னும் கொடிய நோய் உண்டாயிற்று. இறைவன் திருவருளால் நீங்கிற்று. அறியாப் பருவத்திலேயே அவ்வளவு அல்லல்கள் வாய்த்தன. எதிர்கால வாழ்வுக்கு வலுவூட்டுதற்கு வந்தன போலும்!

இலத்திவாடி சின்னசாமி ரெட்டியார் வரதநஞ்சையரிடம் பாடம் கேட்டார். அப்பொழுது கந்தசாமியாரும் உடனிருந்து பாடம் பயின்றார். அந்தாதி முதலிய சிற்றிலக்கியங்களும், சங்க இலக்கியங்களும் அக் காலத்தில் பாடமாயின.

நாமக்கல்லில் இருந்து தமையனார் தம் ஊர்க்கு வந்து கணக்கர் பணி புரிந்தார். அப்பொழுது சிவஞான முனிவர் இயற்றிய நூல்களையும் உரைகளையும் வரன் முறையே பாடங் கேட்டார்.