உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொங்கு நாட்டுப் புலவர்கள்

129

மதுரைத் தமிழ்ச் சங்கப் பண்டிதத் தேர்வு எழுத விரும்பிய அன்பர் பலர் புலவரேறு அவர்களிடம் பாடம் கேட்க வந்தனர். அவர்களுடன் சேர்ந்து கந்தசாமியாரும் பாடம் கேட்டார். யாப்பிலக்கணம் பயிலும் போதே பாட்டியற்றும் திறம் பெற்றார். அப்பொழுது தமக்கு ஆசிரியராகத் திகழும் தமையனார் மேல்,

“பழுத்த செந்தமிழ்ச் சுவையுணர் சிவபிரான் பதத்தில் அழுத்து சிந்தையை உய்திஅஞ் செழுத்தின்என் றருளிப் புழுத்த நாயினும் கடையனாம் எனைப்புகுந் தாண்ட தழைத்த சீர்வரத நஞ்சைய அடிகள்எம் சரணே"

எனப் பாடினார். தொட்டுக் காட்டிய வித்தை துலங்கும் போது மகிழாதவர் எவர்!

அன்புத் தம்பிக்கு அண்ணனார் ஆசிரிய நிலையில் கற்பித்தார்.இனிய தம்பி 'எம் குரு இவரே எனக் கொண்டு கற்றார். பண்டித நுழைவுத் தேர்வு, பால பண்டிதத் தேர்வு, பண்டிதத் தேர்வு ஆகிய மூன்று தேர்வுகளிலும் முதலாமவராகத் தேர்ந்தார். பொற்பதக்கமும் தங்கத் தோடாவும் பரிசாகப் பெற்றார். இப்படி மூன்று தேர்வுகளிலும் ஒருங்கே முதன்மை பெறுதல் அரும்புலமை யாளர்க்கே அமைவதாம்! தம்பியார் பெற்ற பேற்றைத் தாம் பெற்றதாகக் களிப்புற்றார் தமையனார்! அவர் தந்த அருட்கொடையின் பயனல்லவா அது!

பண்டிதப் பட்டம் பணியையும் தேடித் தந்தது. 1907 ஆம் ஆண்டில் காட்டுப் புத்தூர் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியர் ஆனார் கந்தசாமியார். தமிழ்ச் சங்கத் தேர்வில் தனி முதன்மை பெற்றவர் அல்லரோ இவர்? அதனால் சங்கத் தொடர்பு பெரிதும் இவர்க்கு உண்டாயிற்று. சங்க ஆண்டு விழாவில் கலந்துகொண்டு டாக்டர் உ.வே. சாமிநாதையர் தலைமையில் 'மழவர்' என்னும் தலைப்பில் ஓர் ஆராய்ச்சி உரை நிகழ்த்தினார். அது 'செந்தமிழ்' இதழில் கட்டுரையாகவும் வெளிவந்தது.

1915ஆம் ஆண்டில் தமிழவேள் உமாமகேசுவரம் பிள்ளை அவர்கள் அழைப்பின்படி கரந்தைத் தமிழ்ச் சங்க ஆண்டு விழாவில் கலந்துகொண்டு 'சங்க இலக்கியம்' என்னும் பொருள் பற்றி உரையாற்றினார். அவ் விழாவில் தலைமை ஏற்றிருந்தவர் தி.அ. இராலிங்கம் செட்டியார் ஆவர். அவர் கந்தசாமியாரின் புலமை ஆற்றலை வியந்து கோவைக் கல்லூரிப் பணி செய்ய வருமாறு அழைத்தார். அவ்வண்ணம் கந்தசாமியார் கல்லூரிப் பேராசியர் ஆனார்.