உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130

இளங்குமரனார் தமிழ்வளம் - 24

கோவைக் கல்லூரி 1919இல் அரசினர் கல்லூரி ஆயிற்று. அங்கே அவர் பணிபுரிந்தார். பின்னர்க் கும்பகோணத்திற்கு மாறுதல் ஆயிற்று. மீண்டும் கோவைக்கு வந்து பணிபுரிந்தார். கல்லூரிப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர்ப் பேரூரில் தங்கி பலருக்குப் பாடம் சொல்லி வந்தார்.

1953ஆம் ஆண்டில் பேரூரில் சாந்தலிங்க அடிகளார் தமிழ்க் கல்லூரி தோன்றியது. அக் கல்லூரிப் பேராசிரியரானார் கந்தசாமியார். அவ்பொழுது தருமபுர ஆதீனத் தலைவரின் அழைப்பு வந்தது. அதன்படி தருமபுரம் சென்று தங்கினார். தேவாரத்தில் மூன்றாம் திருமுறைக்கு அங்கிருந்து உரை எழுதினார். ஆதீன வெளியீடாக அவ்வுரை வெளிவந்தது. மேலும் அங்கே இருக்க விரும்பாமல், பேரூர்க்கு வந்து பேராசிரியப் பணியை மேற்கொண்டார்.

இவ் வேளையில் தம் அருமைத் தமையனார் இயற்கை எய்தினார். அது கண்டு இவர் ஆறாத் துயரில் ஆழ்ந்தார்."ஐம்பெருந் தந்தையாய் அமைந்து எனக்கு அருளிய அண்ணாவே!" என அரற்றினார். புலவன் புலம்பல் மற்றவர் புலம்பல்போல் அழிவது இல்லை! கந்தசாமியார் பாடிய கையறுநிலைப் பாடல்கள் பல. அவற்றுள் ஒன்று:

“தந்தைபுரி அறம்பாவம் தனில்அறம் தனதுருவாய்த் தரநீ வந்தாய்

முந்துபுரி பவமனைத்தும் திரண்டடியேன்

ஓருருவாய் முளைத்திட் டேனால்

வந்தமுறைப் படியேநீ புகழ்பூணப்

பழியடுத்தே வயங்கு கின்றேன் ஐந்துபெருங் குரவருமாய் அடியேனை ஆளவந்த அண்ணா அண்ணா!”

1958ஆம் ஆண்டில் சாந்தலிங்க அடிகளார் தமிழ்க் கல்லூரிப் பணியிலிருந்து இவர் ஓய்வு பெற்றார். பின்னர்ப் புலவர் குழு உறுப்பினராக விளங்கினார். முயற்சியாளர்க்கு ஓய்வு என்பது ஏது? எப்பொழுதும் அவர்கள் பணி செய்து கொண்டிருக்கவே விரும்புவர். ஆதலால் ஓய்வு பெற்ற பின்னரும் கோவைத் தமிழ்ச்சங்கத்தில் விநாயக புராணம் பாடம் சொல்லிவந்தார். பேரூர்ப் புராணத்திற்கு உரை எழுதும் முயற்சியும் மேற்கொண்டார். தம் வாழ்நாள் அளவும் சாந்தலிங்கர் திருமடத்து ஆதீனப் புலவராக விளங்கினார்.