உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134

இளங்குமரனார் தமிழ்வளம் - 24

தமிழர் வ.உ. சிதம்பரனார், நாவலர் ச. சோமசுந்தர பாரதியார், அறிஞர் கா.சுப்பிரமணிய பிள்ளை, சொல்லின் செல்வர் இரா.பி. சேதுப்பிள்ளை முதலாய பெருமக்கள் பலர் வழக்கறிஞர் தொழில் புரிந்து வண்டமிழ்த் தேர்ச்சி பெற்றவர்கள். அறிஞர் பா.வே. மாணிக்க நாயகர் பொறியியல் அறிஞராக இருந்து மொழித் தேர்ச்சி பெற்றவர். புலவரேறு வரதநஞ்சையபிள்ளை ஊர்க்கணக் கராக இருந்து பின்பு, ஒண்டமிழ் தேர்ந்தவர். இவ்வாறு பிற பிற தொழில்களில் ஈடுபட்டிருந்தும் அன்னைத் தமிழுக்கு அருந் தொண்டாற்றிய பெரும்புலவர்கள் பலர். அவர்களுள் ஒருவர் கவியரசு கு.நடேசகவுண்டர் ஆவர்.

ஆலைவளங் கொழிக்கும் கோவைப் பகுதியைத் தமிழ்ச் சோலையாக்கிய பெருமக்கள் சிலர். அவருள் ஒருவர் நம் கவியரசு அவர்கள்.

நடேசனார் கொங்கு வேளாண்குடியில் பிறந்தவர். அவர் தம் திருத்தந்தையார் குமாரசாமிக் கவுண்டர். திருத் தாயார் அங்கம்மாள். இவர்தம் பிறந்தநாள் 2-4-1901.

செந்தமிழும் சைவமும் சிறக்கத் தோன்றிய செல்வனார் பிறந்தது பங்குனி உத்திர நன்னாள் ஆகலின் 'நடேசன்' எனப் பெற்றோர் பெயர் சூட்டினர். ஆனால், செல்லப்பன் என்னும் செல்லப் பெயரும் இட்டு அழைத்தனர். அவர்கள் குலதெய்வம் செல்லாண்டியம்மன் என்பதாம். குடி சிறக்கத் தோன்றி முழு முதல்வன் அன்பில் ஒன்றிய நடேசனார்க்கு இப் பெயர்கள் இரண்டும் இயற் பொருத்தம் உடையவையாம்.

செல்லப்பனார் பள்ளிக்குச் சென்றார். ஏழாம் வகுப்பு வரை கற்றார். அக்காலையில் அவர்தம் அருமைத் தந்தையார் இயற்கை எய்தினார். "தந்தையோடு கல்வி போம்" என்னும் பொது நெறிப்படி, பள்ளிப் படிப்புக்குப் புள்ளி வைக்கப் பெற்றது.

கணவரை இழந்த அங்கம்மையார் ஆற்றவொண்ணாத் துயருடன் குடும்பத் தலைவர் கடமையையும் தாமே தாங்கினார். அந் நிலையில் அவர்தம் உடன் பிறந்தார் வெள்ளியங்கிரிக் கவுண்டர் உரிமை அன்புடன் உதவ முன் வந்தார்.

வெள்ளியங்கிரிக் கவுண்டர் தையற்கடை ஒன்று வைத்திருந்தார். அவர் தேவார திருப்புகழ்ப் பாடல்களில் ஈடுபாடு உடையவர்; அவற்றுள் பலவற்றை மனப்பாடம் செய்து கொண்டவர். துணி தைத்துக் கொண்டிருக்கும்போது பொறி ஓடும்; காலும் கையும் ஆடும்; வாயோ தேவார திருப்புகழ்ப்