உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 24.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154

இளங்குமரனார் தமிழ்வளம் - 24

பள்ளியிலும் நெடுங்காலம் தமிழாசிரியராகப் பணி செய்தார். பள்ளிப் பணியின் வழியே பைந்தமிழ் வளத்தை வாரி வழங்கி மாணவர்களை வயப்படுத்தினார். மொழிப் பாடத்தில் சிறந்தோங்க வழிகாட்டினார். மாணவர்களின் ஒருமித்த அன்புக்கும் உரியவராக விளங்கினார். அதே அளவில் தம் பணியே முடித்துக்கொண்டார் அல்லர். தனியே தமிழைக் கற்க விரும்பு பவரை எல்லாம் தணியா விருப்புடன் அழைத்து வைத்துத் தம் இல்லத்தில் பாடம் நடத்தினார். அவ்வகையில் தமிழ்ப்புலமை பெற்றுச் சிறந்தோர் பலராவர்.

கோவை உயர்நிலைப் பள்ளிகளில் திருச்சிற்றம்பலனார் பணி செய்தாலும், இவர் புகழ் அவ்வூர்ப் பக்கமெல்லாம் பரவிற்று. சென்னையிலுள்ள பேரறிஞர்கள் இடை டையேயும் பரவியது. கொங்கு நாட்டிலும் தொண்டை நாட்டிலும் திருச்சிற்றம்பலனார் புலமை மதிக்கத்தக்கது ஆயிற்று. பூமணம் போன்றது அல்லவே புலமை மணம்! அஃது எட்டாத் தொலைவிலும் எட்டி இனிது மணக்கும் இயல்பினது அன்றோ!

1898ஆம் ஆண்டில் சென்னை மாநிலக் கல்லூரியில் மாணிக்கவாசகரைப் பற்றி ஓர் அரிய ஆராய்ச்சியுரை நிகழ்த்தினார். அந் நிகழ்ச்சி அறிஞர்களையெல்லாம் கவர்ந்தது. இவருடைய சொல்வன்மையும், ஆராய்ச்சி வன்மையும் கண்டு ஆங்கிருந்தவர்கள் இன்பத்தில் ஆழ்ந்தனர். மாணிக்கவாசகர் காலம் கி.பி. மூன்றாம் நூற்றாண்டு என்பதை இவர் அறுதியிட்டு முடிவுகட்டியுரைத்தார். அன்றியும் கல்லாடம் என்னும் நூலை இயற்றிய கல்லாடனார் சங்ககாலக் கல்லாடனார் அல்லர். சங்ககாலக் கல்லாடனார்க்குப் பிற்பட்டவர் இக் கல்லாடனார் என்பதைத் தெளிவாக விளக்கிக் காட்டினார். இத்தகைய ஆராய்ச்சிகள் அறிஞர் உலகுக்கு வழி காட்டிகளாக அமைந்து மேலும் ஆராய்வதற்குத் தூண்டுதலாயின.

சொற்பொழிவில் வல்லவரான திருச்சிற்றம்பலனார் ஒருநாள் அன்னிபெசண்டு அம்மையாரின் சொற்பொழிவு நூல் ஒன்றைக் கற்றார்.அப்பொருளில் ஆர்வங்கொண்டார்.இராமாயணச் சுருக்கமாக அமைந்த எட்டுச் சொற்பொழிவுகளைக் கொண்டது அந்நூல். அதனை அழகாக மொழி பெயர்த்து 'இராமச் சந்திரர்’ என்னும் பெயர் சூட்டி இவர் வெளிப்படுத்தினார்.