உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் கா.சு.வின் தமிழர் சமயம் ஓர் ஆய்வு

95

"நல்லொழுக்கமும் அவசியக் கல்வியும் (கட்டாயக் கல்வியும்) பயில்விக்கப்பட்ட மாணவர்களுக்குப் பன்னிரண்டு ஆண்டுக்கு மேல் அவரவர் மனப்பான்மைக்கும் ஆற்றலுக்கும் ஏற்றவாறு தொழிற்கல்வி பயிற்றுதல் வேண்டும். அல்லது தக்க நூற்கல்வி பயிற்றுதல் வேண்டும். செல்வர்கள் கல்வியாளர் களோடு கலந்து தொழிற்கல்விக்கு ஆவன செய்தல் வேண்டும்"

"ஒவ்வொருவருக்கும் ஒவ்வோராற்றல் பிறவியில் உண்டு. அத்தொழிலில் அவர் ஈடுபடல் நன்று. பாவமற்ற தொழில் எதனைச் செய்தாலும் இழிவில்லை. தொழிலில் உயர்வு தாழ்வு என்பது இல்லை"

"தொழில் இல்லார்க்கு வேலை கொடுப்பதற்குச் சமுதாயத் தலைவர்கள் துணை புரிய வேண்டும். முயற்சிக்குத் தக்க பயன் எந்தச் சமுதாயத்தில் எளிதாய் அமையுமோ அச்சமுதாயம் முன்னேற்றத்தில் முதல் நிற்பதாகும்."

சமுதாயச் செல்வர்கள் தங்கள் கடமையை ஒழுங்காக இயற்றுவார்களானால் சமுதாயத்தில் பிழைப்புக்கு வழி இல்லாத மக்களே இருக்க மாட்டார்கள்.

ஓரினம்

தமிழர் இனம் படிப்படியே முன்னேறுதற்கும், ஒரே னமாதற்கும் ஒருவழியைச் சுட்டுகிறார் கா.சு.

"தமிழரினத்தில் உள்ள பல குலங்களும் ஒன்றோடு ஒன்று போரிடாமல் பகைமையையும் பொறாமையையும் ஒழித்து ஓருடம்பின் பல உறுப்புக்கள் போல ஒற்றுமைப் பட்டு வாழ் வேண்டும். கல்வி நிலையும் செல்வ நிலையும் தழைத்தோங்கும் பொருட்டுக் குலத்தலைவர்கள் குலத்திற்காகப் பாடு பாடுவதில் ஒருவருக்கொருவர் உதவியும் இணக்கமும் உடையவர் களாய் இருத்தல் வேண்டும். கலப்பு மணத்தால் குலங்களெல்லாம் ஒற்றுமைப்பட்டு ஒரு பெருஞ் சமுதாயம் ஆதல் வேண்டும்."

"பல இனங்களும் உணவாலும் மணத்தாலும் இணைக்கப் படின் தமிழர் என்ற உணர்ச்சி தலையெடுத்து வெவ்வேறு குல மக்கள் குலப்பெருமை பாராட்டும் வழக்கம் தளர்வடையும். நடையுடை பாவனைகளிலும் தூய வழக்கங்களிலும் ஒரு தன்மையான முறை பல இனத்தாருள்ளும் ஏற்படுமாயின் இன வேற்றுமையுணர்ச்சி விரைவில் ஒழிந்துபோம்.'