உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு.வி.க. தமிழ்த் தொண்டு

103

பொழிவாளன் புகல்வு

தென்னாடு பெற்ற பேறுகளுள் தலையாயது தென்றல். தெற்கிலிருந்து தவழும் மென்காற்றைத் 'தென்றல்' என்று வழங்கினர்.

தென்றல் மெல்லியது; ஊற்றின்பத்திற்கு உறையுளாய் அமைந்தது. ஆதலால், தென்றல் என்பதற்கு இனிமை, மென்மை முதலிய பொருள்களும் வழங்கினர்.

தென்றல் இயலும் நாட்டில் பிறந்து திளைத்த குமரகுருபரர், “தென்னன் தமிழின் உடன்பிறந்த சிறுகால்" என்றார். மென்கால், இளங்கால், சிறுகால் என்பனவெல்லாம் தென்றலே!

"தென்னாடு பெற்ற செல்வத் தென்றலே" என விளித்து, "நின் வளத்தைத் தென்னாட்டுக்கு அல்லால் எந்நாட்டுக்கு அளித்தாய்" என வியந்து வினாவினார் பாவேந்தர்.

"தென்றல் இன்பத்தை நுகர்தற் கென்றே இறைவன் தென்முகம் நோக்கி ஆடுகின்றான்" எனக் கரணியங் காட்டினார் திருவிளையாடற் பரஞ்சோதியார்!

ஒரு தென்றலோ தமிழ்நாட்டுக்கு வாய்த்தது? இல்லை! இரண்டு தென்றல்கள் வாய்த்தன. தமிழ்த் தென்றல் திரு.வி.க.வும் ஒரு தென்றல் அல்லரோ!

-

திருவாரூர் விருத்தாசல கலியாண சுந்தரராம் பெருக்கத்தின் சுருக்கம், திரு.வி.க. இதனை, அறிஞருலகம் எப்படி வெள்ளி டையாக அறியுமோ,அப்படியே தமிழ்த் தென்றல் என்றாலும் அறியும்!

சால்பு பண்பாடு மனிதம் என்பவை கருத்துப் பொருள்கள். இவற்றைக் காட்சிப் பொருளாகக் காட்ட வேண்டுமா? திரு.வி.க.வின் ஓவியத்தைக் காட்டலாம்! சிற்பத்தை நாட்டலாம்!