உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

இளங்குமரனார் தமிழ்வளம் - 25

வள்ளுவமாமுகில் பொழிந்த வளமழை தமிழ் மண்ணுக்கு உண்டு என்றால், அவ்வளமழைப் பேறாக முகிழ்த்த வாழ்வுப் பேறும் தமிழ் மண்ணுக்கு உண்டு! அது திரு.வி.க.

திரு.வி.க.வாழ்வே நூல்! வாழ்க்கைக் குறிப்புக்கள் அதனைக் காட்டும்! நூலே வாழ்வு என்பதை எது காட்டும்? திரு.வி.க. இயற்றிய நூல்களெல்லாம் காட்டும்!

திரு.வி.க.எண்ணியது நூல்; எழுதியது நூல்; புகன்றது நூல்; பொழிந்தது நூல். இவை நூலார்க் கெல்லாம் பொதுமைப் பட்டனவே. ஆனால், திரு.வி.க. வுக்கோ இம் மண்ணும் நூல்! விண்ணும் நூல்! கதிரும் நூல்! மதியும் நூல்! நீரும் நூல்! நெருப்பும் நூல்! இயற்கைப் பூதமெல்லாம் நூல்!

இயற்கைப் பூதங்கள் மட்டுமோ திரு.வி.கவுக்கு நூல்கள்? மலரும் நூல்! மகவும் நூல்! மங்கையும் நூல்! தொழிலாளர் நூல்! தொண்டர் நூல்! தொல்லை அரசியலும் நூல்: தூய்மைக் களங் களும் நூல்! துறவும் நூல்! இறையும் நூல்! எல்லாம் நூல்! எங்கும் நூல்!

நூலே அவர்! அவரே நூல்! ஆகலின், திரு.வி.க. நூலர் என்க. ளமை விருந்தைப் படைத்தது எது? கைபுனைந்தியற்றாக் கவின் பெறுவனப்பாம் இயற்கை அழகில் முருகைக் கண்டது எது? பெண்ணின் பெருமையாய்ப் பிறங்கியது எது? முடியா? காதலா? சீர்திருத்தமா? என முழங்கியது எது?

மனித வாழ்க்கையும் காந்தியடிகளுமாய் மாண்புற்றது எது? தமிழ்த் தென்றலாய்த் தவழ்ந்ததும் தமிழ்ச் சேலையாய்த் தழைத்ததும் எது? எது? திருக்குறள் விரிவுரை தெளிந்து தெளிந்து தேர்ந்து தேர்ந்து உரைத்தது எது? பொருளும் அருளும், இந்தியாவும் விடுதலையும் இன்னவெல்லாம் இசைத்தது எது? கொலை வேட்டல் வெறுத்துக் கலைவேட்டலாய் வேட்டங் கொண்டது எது? சித்தமார்க்கமும், நாயன்மார் திறமும், இருமையில் ஒருமையும் கண்டது எது? ஆலத்தையும் அமுதாக்கும் அந்தண்மை அருளியது எது? வளர்ச்சியும் வாழ்வுமாய் வயங்கியது எது? உள்ளொளியாய், இருளில் ஒளியாய் ஒன்றியது எது? எது?

முதுமை உளறல் அல்லது படுக்கைப் பிதற்றல் பகர்ந்தது எது? சித்தந்திருந்தல் அல்லது செத்துப் பிறத்தல் செப்பியது எது?