உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு.வி.க. தமிழ்த் தொண்டு

105

இவற்றைச் செய்தது வாழ்வு நூலா? நூல் வாழ்வா?இருமையும் ஒருமையாய் இலங்கிய ஒன்றை எப்படி இசைப்பது? எப்படி இசைத்தால் தான் என்ன?

1954-யான் பெறற்கரிய பேறு பெற்றயாண்டு! அதே யாண்டே நெஞ்சை நீராய் உருக்கிய யாண்டுமாம்! எதிரிடைப்பட்ட இரண்டையும் ஒன்றாய் ஊட்டியது ஒரு நூல். அது “திரு. வி.க. வாழ்க்கைக் குறிப்புக்கள்" என்னும் நூல்!

ஒரு நூல்,இருநிலை எதிரிடை இருநிலைப்படுத்துமோ? ஏன் படுத்தாது? நோயும் மருந்தும் ஒரு பொருளாக இருப்பதை வள்ளுவம் கூறுமே! பெருக வைத்ததே உருகவும் வைத்ததைக் கம்பன் காட்டும் ‘சூடையின் மணி' காட்சிப்படலத்தில் காட்டுமே!

'வாழ்க்கைக் குறிப்புக்கள்' ஒரு நூலா? தேனொடு கலந்த பாலா கருக்கொடு கூடிய வேலா.

'வாழ்க்கைக் குறிப்புக்கள்' திரு. வி.க. வரலாறா? இல்லை, சால்பின் வரலாறா? இல்லை, தவம் செய்த தவத்தின் வரலாறா?

வாழ்க்கைக் குறிப்புக்களைப் பயில வாய்த்த பிறப்பின் பேறேபேறு என்னும் பெருமிதம் ஒருபால்! அவ் வாழ்வுடையாரைப் பார்க்கவும் கொடுத்து வைக்காத பாழ்த்த பிறப்பு நேர்ந்ததே என உருகுதல் ஒருபால்!

நெஞ்சின் நினைவாகி நிறைவாகியவர்க்கு என்ன நினைவுக் குறி செய்யலாம்? உணர்வுக்குறியாக, உயிரின் உயிர்க்குப் பெயர் சூட்டலாம்! காட்சிக்குறியாக ஒளிப்படம் நாட்டலாம்!

முன்னதே முதற்கண் முந்தி நின்றது; பின்னது பின்னே பிறங்கியது. என் இனிய உயிர்த்துணை வயிறு வாய்த்திருந்தபேறு 'ஆண்' எனின், மண வழகன் (கலியாண சுந்தரன்) பெண் எனின் திலகவதியாய்ப் பிறந்தது. ஏனெனின், வயிறு வாய்த்திருந்தபோதே தீர்மானித்திருந்த பெயரேயன்றோ!

'திலகவதியார்' திருநாவுக்கரையர் தம் அக்கையார் பெயரன்றோ! ஆம்! அத்திருத்தொண்டரைத் திருத்தொண்டுக் கெனவே ஆட்கொண்டு, அவர்க்கெனவே உயிர்தாங்கித் தம்மையும் திருத்தொண்டுக்கே ஆளாக்கிக் கொண்ட தவப்பெருமகளார் அத் திலகவதியாரே! அவர்தம் தொண்டு ஆட்படுத்திய பேற்றால்,