உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

இளங்குமரனார் தமிழ்வளம் - 25

தம்மைத் தொண்டுக்கெனவே ஆட்படுத்திக்கொண்ட திரு.வி.க.தம் அருமை மகளார்க்கு அவர் பெயரைச் சூட்டினார்.

திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புக்களில் மின்னலிடும் அத் திலகவதிச் செல்வி "கண்காட்டி முகங்காட்டி கைகாட்டி கால் காட்டி ஓராண்டு வளர்ந்து" (வா.கு. 712) பெருநிலையுற்றது! அத் திலகவதிப் பெயர் சூட்டல்- திரு.வி.க. உணர்ந்து உணர்ந்து ஊற்றெழும் அன்பால் சூட்டிய அப் பெயரைச் சூட்டல் அவர்க்குச் செய்யும் படையலாமன்றோ! உள்ளத்தை அள்ளிக் கொள்ளை கொண்ட அவ்வுள்ளொளிப் பெயர் வடிவம், உலவுமிடத் தெல்லாம் அவருணர்வும் உலாவி நிற்றல் உணர்வுடையார் உணரக் கூடியதேயன்றோ!

இனிக் காட்சிக்குறி எப்படி எழுப்புவது? என் தமிழ்ச் செல்வத்தால் கையகல வீடொன்று எழுப்பப்படும் எனினும், அதன்கண் முதற்கண் காட்சி வழங்குபவர் திரு.வி.க.வாகவே இருத்தல் வேண்டும் என்பது என் உட்கிடை!1960 இல் ஒரு சிற்றில் எழுந்தது. குடிபுகுவும் ஆயிற்று! ஆயினும் திரு.வி.க. என் உள்ளகத் துத்தான் உறைந்தாரேயன்றி, உறைவகத்து ஒளிப்படமாய்ப் புகுந்தாரல்லர். ஏன்? உள்ள நிறை ஓவியம் ஒன்று அகப்பட்டிலது!

அகப்பட்டார் ஓரன்பர்; அரிய தொண்டர்; காந்தியார் காதலர்; நீ. இராசகோபாலர்! என் உட்கிடை உணர்ந்த அவர், தம் அன்புக்கினிய ஓவர் ஒருவரைக் கொண்டு திரு.வி.க. நிழற்படச் சிற்றோவம் ஒன்றைப் பேரோவமாக்கிப் பேரன்பால் வழங்கினார்! தமிழ்த் திரு.வி.க. தமிழால் கிளர்ந்த தமிழ் உறையுளில் புகுந்தார்! இந்நாள் தமிழ்க் கோயிலுள் வீற்றிருக்கின்றார்! தமிழ்க் கோயிலாவது, நூலகம்! பாவாணர் ஆராய்ச்சி நூலகம்!

என் இளந்தைப் பருவத்திலேயே என்னை ஆட் கொண்ட தமிழ்ச் சான்றோர் -நூலாசிரியராய்க் கிளர்ந்து நெஞ்சாசிரியராய் நிலைத்தவர் - நால்வர். அவர்கள் தவத்திரு மறைமலையடிகளார், மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர், பேராசிரியர் சி. இலக்குவனார், தமிழ்த்தென்றல் திரு. வி. கலியாணசுந்தரனார்.

இவர்கள் எப்படி என்னுள் புகுந்தனர்? எப்படி என்னை ஆட்கொண்டனர்? எப்படி என்னை உய்யக் கொண்டனர்?

எளியேன் வாழ்வு என்றும் தமிழ் வாழ்வாகத் தழைக்கும் வண்ணம் தமிழால் வயப்படுத்தி, ஊனும் உயிரும் உணர்வும்