உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு.வி.க. தமிழ்த் தொண்டு

107

அதிலேயே ஒன்ற வைத்தவர்கள் இவர்கள். 'கட்டை விரலை' வாங்காமல், காதலை மட்டும் வாங்கிக் கொண்ட காதல் தலைவர்கள் இவர்கள்!

நால்வர்மேல் நலத்தகு காதல் ஒருவர்க்கு முகிழ்க்குமோ? நால்வர் நான்மணி மாலையை மேலோட்டமாகப் பார்த்தவரும் இவ் 'வெளிய' வினாத் தொடார்! தொடார்! நால்வர் என்ன? நன்மொழிக் காதல், நாற்பது பேர்மேலும் ஒருவர்க்கு முகிழ்க்கும்! சங்கப் பலகை என்பது தமிழ்க் காதல் நெஞ்சமே! தக்கோர்க் கெல்லாம் தகுமிடம் தரும் தாமரைத் தண்மலர் தமிழ்க் காதல் நெஞ்சமே!

தனித்தமிழ் உணர்வை வழங்கி ஆட்கொண்டவர் முதலாமவர்; தனித்தமிழ்ச் சொல்லாய்வுச் சுடர்ம்மையால் ஆட்கொண்டவர் இரண்டாமவர்;

தனித்தமிழ்த் தொண்டுக்கே ஆட்பட்டு ஆட்கொண்டவர் மூன்றாமவர்; வாழ்வாங்கு வாழும் தமிழ் வாழ்வால் ஆட்கொண்டவர் நான்காமவர்;

அகவை பதினேழில், 'கிருஷ்ண'னாக இருந்த என்னை இளங்குமரன்' ஆக்கி வைத்தவர் முதலாமவர். அகவை பதினெட்டிலே, சுட்டும் சுடர்ச் சொல்லால் தொட்டுத் தழுவியவர் இரண்டாமவர். அதே அகவையிலேயே, கால்பட்ட இடமெல்லாம் கன்னித் தமிழ் கமழச் செய்தலால் கவர்ந்து கொண்டவர் மூன்றாமவர். அகவை இருபத்து நான்கில், நெஞ்சை உருக்கி நேயத்தால் உறவாகிக் கொண்டவர் நான்காமவர்.

பின்னைப் பின்னை எத்துணை எத்துணைப் பெருமக்கள் நெஞ்சில் தடம் பதித்துளர்! இடங்கொண்டுளர்! தமிழ் நெஞ்சம் சங்கப் பலகை என்பது எத்துணை மெய்ம்மை!

தமிழ்க்காதல் எத்துணைப் பெருமையது! தமிழை விடுத்த காதலோ, காதலை விடுத்த தமிழோ - தமிழ் மண்ணில் உண்டோ? உண்டோ? தமிழே காதல்; காதலே தமிழ்! என்பதன்றோ தமிழ்த் தேர்ச்சியர் நுவற்சி.

46

'இது தமிழ் கூறிற்று' என்பது இறையனார் களவியலுரை. "தமிழறிவுறுத்தற்குப் பாடியது" என்பது குறிஞ்சிப் பாட்டு. இவற்றில் தமிழ் எது? காதல் எது? இரண்டையும் பிரித்துத் தனித்தனியே காண வொண்ணுமோ? தமிழ்க் காதலைக் காதற்றமிழ் எனலாம். தமிழ் 'மாணிக்கம்' வழங்கிய தமிழ்க் காதல் காண்க.