உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1

?

நுழைவு வாயில்

பல்கலைப் புலவர் தமிழ்க 'கா.சு.' அவர்களின் நினைவைப் போற்றிக் கொண்டிருக்கும் குழித்தலை தமிழ்க் கா.சு. இலக்கியக் குழு இவ்வாண்டில் கா.சு. அவர்களுடைய சிந்தனைகளை ஆய்வு செய்து தமிழகத்தில் தவழச் செய்யும் முயற்சியின் நுழைவு வாயிலில் தனது முதலடியை எடுத்து வைத்திருக்கிறது.

எடுத்து வைத்த எங்கள் முதலடியை எதிர்கொள்ளவும், ஏற்றமுறச் செய்யவும் வல்ல தக்காரை, தமிழ்ப் பெருமகனாரை தெளிந்த ஞானமும், தேர்ந்த சிந்தனையும், ஆழ்ந்தபுலமையும், ஆய்வு நோக்கும் ஒரு சேர அமைந்த இலக்கியச் செம்மலை, கழகப் புலவரை என்றுமுள தமிழின் இளமைக்கு வளமை சேர்க்கும் இளங்குமரன் அவர்களை அணுகி எங்களை வழி நடத்திச் செல்ல வேண்டும் என்ற வேணவாவை வெளியிட்டோம்!

தொண்டுக்குத் துணை நிற்கத் துடிக்கும் தூய தமிழ் உள்ளத்திற்கு உரியவரான அவர், எவ்வித மாற்றமும் மறுப்பும் கூறலின்றி மனமுவந்த தனது இசைவை மகிழ்ச்சியோடு தெரிவித்தார்.

'எழுதித் தாருங்கள்' என்று கேட்டால் எது பற்றி எழுத வேண்டும் என்பது பற்றிக்கூட கேட்பதில்லை. எவ்வளவு கிடைக்கும் என்றே கணக்குப் பார்க்கும் இலக்கிய வியாபாரிகளின் காலமாகப் போய்விட்ட இன்றைய நாளில், கா.சு. அவர்களுடைய "தமிழர் சமய”த்தை ஆய்வு செய்து தாருங்கள் என்று கேட்டவுடனேயே மகிழ்ச்சியோடு ஒப்புதல் தந்ததோடல்லாமல் கட்டுரையை எப்போது உங்களுக்குத் தரவேண்டும் என்றும் கேட்டார்கள். வெள்ளத்தால் அழியாத வெந்தணலால் வேகாத கல்விச் செல்வத்தை நிரம்பப் பெற்றிருக்கும் அவர், பொருட் செல்வத்தை ஒரு பொருட்டாக எண்ணவில்லை. ஆய்வுக்கான பொருள் பற்றி எண்ணினாரே அன்றி அதற்காகப் பெறும் பொருள் மீது சிந்தை செலுத்த நினைத்தாரில்லை.