உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. அரசியல் தொண்டு

'அரசியல் தமிழை வளர்க்குமோ?' என அறிந்தோர் ஐயுறார். அரசியலார் தமிழில் ஈடுபட்டு வளர்க்காமையே தமிழின் தளர் நிலைக்கெல்லாம் அடிப்படை. அரசியல் துணையில்லாமல் எத்துணை எத்துணை அறிஞர் கூடினும் தொண்டர் கூடினும் மொழிவளம் எய்தாதாம்!

அரசியலே அச்சு

ஆங்கில ஆட்சியாளர் கருத்தில்லாமல், ஆங்கிலம் வளர்ந்ததோ? ஆங்கிலர் அகன்றும், ஆங்கிலம் அகலாமல் ஊன்றி நிற்குமோ? அரசியல் ஆணை இல்லாமல் இந்தியை இத்துணைச் செலவிட்டுப் பரப்ப இயலுமோ? முந்தை வேந்தர்களை வயப்படுத்தி வைத்ததனால் அன்றோ இன்றுவரை தமிழ்நிலத்தில் வடமொழி கோயில் மொழியாக நிலைத்துள்ளது! அரசியல் இன்றித் தமிழை வளர்க்க நினைத்தவாறு சீராக வளர்க்க - யலாது. ஆனால் அவ்வரசு தமிழை வளர்க்கப் பொதுமக்கள் வலியுறுத்தல் இல்லாமல் முடியாது! மக்கள் ஆட்சியில் மக்களை அறவே புறக்கணித்து ஆட்சி நடத்த முடியுமோ?

தமிழ்த்தீர்மானம்

20.4.1918, 21.4.1918 ஆகிய இரண்டு நாள்களிலும் சென்னை மாகாணச் சங்க மாநாடு தஞ்சையில் நிகழ்ந்தது. அம் மாநாட்டில் தமிழ்பற்றி வந்ததொரு தீர்மானம். அதை வழிமொழிந்து பேசினார் திரு.வி.க."இனிப் பொதுக் கூட்டங்களில் தமிழர்கள் தாய் மொழியிலேயே பேசுதல் வேண்டும். அயல்மொழியில் பேசுதல் கூடாது. எவரேனும் அயல்மொழியில் பேசப்புகுந்தால் அவரைத் திருத்தும் பொறுப்பைப் பொதுமக்கள் ஏற்றல் வேண்டும்" என்று வலியுறுத்தினார். தேசபக்தனிலும் கிளர்ச்சி செய்தார். அதனால், தமிழில் பேசலாகாது என ஆங்கிலத்தில் நாவன்மை காட்டி வந்தோரும் தமிழில் பேசினர். "பொது மக்கள் கிளர்ச்சியின் முன்னர் எந்தத்தலைவர் என்ன செய்தல்கூடும்?" என்கிறார்.