உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் கா.சு.வின் தமிழர் சமயம் ஓர் ஆய்வு

11

தமிழர் சமயம் அடித்தளம் உடையது. கற்பனை கதையாய் ஒழிவதன்று.வாழ்வாய் வாழ்வொடு வாழ்வாய் - அமைந்தது! அவர் தம் அன்புவாழ்வு இல்லறம்! அவர்தம் அருள் வாழ்வு துறவறம்! இல்லறத்தின் இடமும் துறவறத்தின் இடமும் இல்லமே! இரண்டும் வீடும், காடும் அன்று, பெயர் மாற்றம், உடை மாற்றம் அன்று., ஒன்றன் வளர்நிலையில் ஒன்று அமைவது! தனித் தனிப் பகுப்பன்று!

பள்ளிப்பயிற்சி முடித்தவர் கல்லூரிக் கல்வியில் தலைப் படுதல் போல வாழியல் நிலைமாற்றமேயன்றித் தனித் தனிப் பிரிவினதன்று. கல்வியில்கூட, பள்ளிக் கல்வியும் கல்லூரிக் கல்வியும் ஓரிடத்தும் உண்டு. வேறு வேறிடத்தும் உண்டு. ஆனால், தமிழர் தம் இல்லறமும் துறவறமும் இல்லத்தில் அமைந்து விளங்கும் வளர் நிலை வாழ்வேயாம்.

"காமஞ் சான்ற கடைக்கோட் காலை ஏமஞ் சான்ற மக்களொடு துவன்றி அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும் சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே” என்பது தொல்காப்பியம் (கற்பு. 51)

மனநிறைவான இல்லறம்; அதன் பின்னர் மக்களும் சுற்றமும் சூழச் செம்பொருள் நெறியில் பழகுதல்; இவை மனையறப் பயன்!

குடும்பத்துக்காக வாழும் வாழ்வு இல்லறம்; குடும்பத்தில் இருந்து ஊருக்கும் உலகுக்குமாக வாழும் வாழ்வு துறவறம்! இவ்விரண்டும் ஆடவர் பெண்டிர் ஆகிய ஒவ்வொருவர் வாழ்விலும் கட்டாயம் வேண்டத் தக்கதே! இரண்டில் ஒன்றை விடுத்த வாழ்வு வெற்றி வாழ்வன்று என்பது உட்கிடை இவ்வளர் நிலை விளக்கமே வள்ளுவ அறத்துப்பால்!

தமிழர் சமயத்தின் இவ்வடிப்படை போற்றப் பட வேண்டும். தமிழ் உணர்வுடன் சமயம் திகழ வேண்டும். தமிழர் வாழ்வுடன் இரண்டறக் கலந்ததாகச் சமயம் அமைய வேண்டும். தளர்வார்க்கு ஊன்றும்,விழுவார்க்கு எழுப்பும் உடைய உயிர்த்துணையாகச் சமயம் அமைய வேண்டும். உணர்வால்உலகைத் தழுவிக் கொள்ளும் உயர்வுடைய தமிழ்ச் சமயம், தமிழ்கூறு நல்லுலகத்தில் தோன்றி உலகாக விரிதல் வேண்டும்.