உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் கா.சு.வின் தமிழர் சமயம் ஓர் ஆய்வு

37

பொன்போல் போற்றிக் காத்துக் கொண்டுபோய்க் கொடுக்கும் போதும் அவன் உள்ளமெல்லாம் அள்ளுறி நிற்குமன்றோ! ஒவ்வோர் மலரும், அதன் ஒவ்வோர் இதழும் அவன் அன்புப் பொறிப்பை அடைந்து திளைக்குமேயன்றோ? தழையாடை அளவில் நில்லாமல் பூவாடையாகவே பொதுளுவதும் உண்டே யன்றோ!பொன்னாடையே எனினும் அவ்வாடைகட்கு ஒப்பாமோ? இந்நாள்வரை இறைவிக்குப் 'பூம்பாவாடை' சாத்தி வருதல் பழந்தழையின் எச்சமாம் என எண்ணுகிறது கா.சு. வின் கூர்த்த மூளை.

கு

பாலாடையும் மெல்லிய நூலாடையும், மரவுரியாடையும், தோலாடையும் பிறவும் தமிழர் பயன் பொருளாக இருந்தன. மகளிர் கச்சணிந்த செய்தி பலபடக் கூறப்படுதலால் அவர் மேலாடையின்றியிருந்தனர் என்பது தவறாம் எனச் சுட்டுகிறார். மகளிர் அணிகலங்களும் விரிக்கப் படுகின்றன.

வேந்தன் என்பான் அரசன் அவன் முடிவேய்ந்தவன் ஆதலால் வேந்தன் எனப்பட்டான். கொன்றை வேய்ந்த செல்வன் என்பது அறிக. இன்றும் கூரைவேய்தல் முடிகட்டி வேய்தலாக இருத்தலை அறிக.

மணிமுடியணிந்த வேந்தன் - அணிகலம் பலப்பல புனைந்த வேந்தன் - இறைவன் எனப்பட்டான். இறைவனாம் முழு முதலுக்கும், மன்னனும் மக்களும் தாம் உவப்பனவெல்லாம் பூட்டியும் படைத்தும் உடுத்தும் மகிழ்ந்தனர். கோயில் கருவூலக் காட்சியைப் பெற்றது.

பயன்பொருள்களின் நாட்டம் நிறைவுற்றபின் கவின் பொருள்களில் எவர்க்கும் கருத்துச் செல்லுதல் இயற்கை. அவ் வகையில் கிடைத்தற்கு அரியவும் வேலைப்பாடு மிக்கவுமாகிய பொருள்கள் பெருவரவேற்புக்குரியன. இவ்வரவேற்பே கடல் கடந்த நாடுகளுக்கும் கலஞ்செலுத்தி வணிகம் செய்யும் ஆர்வத்தை உண்டாக்கிற்றாம். தொல்பழங்காலத்திலேயே தோகை, தந்தம், முத்து,அரிசி,மிளகு, தேக்கு முதலியவை சிரேக்கம், சாலடியம், சீனம் முதலிய நாடுகளுக்குத் தமிழகத்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டன. அதனால் அந்நாட்டு நாணயங்கள் இங்கும், இந்நாட்டு நாணயங்கள் அங்கும் அகழ்வாய்வாய் புலப்பட்டுப் பழங்கால வாணிகத்தைப் பறைசாற்றுகின்றன.