உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழக அமைச்சர் திருவரங்கர் வரலாறு

99

இலங்கியது. இம் மாநாட்டுத் தீர்மானங்கள் இருவகையாய் மிளிர்ந்தன. மெய்கண்ட மாநாட்டுத் தீர்மானங்கள் 10; தமிழ்ப்புலவர் மாநாட்டுத் தீர்மானங்கள் 9. இம் மாநாட்டின் போது சிறப்புப் பட்டங்களும் பரிசுகளும் பெற்ற கலைச் செல்வர்கள் பதின்மர்.

கண்ணாயினார்,

மாநாடு என்றால் இப்படி நடாத்தப்பெற வேண்டும் என்று எண்ணவைத்த மெய்கண்டார் மாநாட்டின் பயன் பெரிதாயிற்று. அப் பயன் விளைவின் இடையே அதற்கு அரும்பாடுபட்ட விளைவால் திருவரங்கர் உடல் நலம் குன்றத் தொடங்கியமை தவிர்க்க முடியாதது ஆயிற்று. மாநாட்டின் உழைப்பு அவர்க்குத் தீராத நெஞ்சு வலியைத் தந்து வருத்திற்று. கருமமே மெய் வருத்தம் பாரார், பசிநோக்கார், கண்துஞ்சார் என்பது நாடு அறிந்த செய்தியாயிற்றே! ஆனால் இயற்கையை ஒறுப்பாரை இயற்கை ஒறுக்காமல் விடாது என்பது திரு. வி. க. பட்டறிந்துரைத்த மெய்ம்மொழியாயிற்றே! உந்தும் உணர்வும் உலையா உரமும் உடையார் பின்வருவதை எண்ணிப் பின்னிடுவது என்பது வரலாறு காணாத செய்தி என்பதை அறியார் எவர்? அரங்கர் தம்மை நஞ்சென நெஞ்சு வலி வருத்தும் காலையிலும் அதனை ஒதுக்கி வைத்துத் தம் கடமைகளிலேயே ஒன்றி நிற்பாராயினார். 'பிணிக்குப், பணி செய்வார் செய்யார்' என்னும் நோக்கு ஒன்றும் உண்டோ?

திருக்கோயிலை வடமொழி பற்றிக்கொண்டதுபோல இசையரங்குகளைத் தெலுங்கு பற்றிக் கொண்டு 'தமிழில் இசையும் உண்டோ?' என்று வினாவும் நிலையும் உருவாகிற்று. தனை நினைந்து வருந்தி ஆக்கப் பணிகள் புரிந்தவர்களுள் தலையாய ஒருவர் செட்டி நாட்டரசர் அண்ணாமலைச் செட்டியார் ஆவர். அவ்வாக்கப் பணிக்கு நாட்டினரெல்லாரும் அரவணைப்புத் தர வேண்டும் என்பதில் அரங்கர் பேரார்வலராய் இருந்தார். அதனால் ‘இசைத் தமிழ்க் கழகம்’ ஒன்றனைத் திருநெல்வேலியில் தோற்றுவித்தார். ஒரு வேண்டுகோளும் விடுத்தார்.

இசைத் தமிழ்க் கழகம், திருநெல்வேலி.

தமிழன்பர்கட்கு ஒரு வேண்டுகோள்.

திருநெல்வேலியில் இதுவரை இசைத் தமிழ்க் கழகம் இல்லாதது பற்றித் தமிழர் ஏக்கங் கொண்டிருந்தனர். இப்போது எங்கே பார்த்தாலும் இசையைப்பற்றிய இயக்கம் வலுத்து