உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

இளங்குமரனார் தமிழ்வளம் - 26

அஞ்சலகப் பணியில் சேர விரும்பினார். ஆனால் அண்ணல் திருவரங்கனார் பேருள்ளம் வேறாக இருந்தது. தம்பியைக் கொழும்புக்கு வருமாறு எழுதினார். 1916ஆம் ஆண்டு சூலைத் திங்களில் வ. சு. கொழும்புக்குச் சென்றார்.

காழும்பில் இருந்த முதனிலைக் கல்லூரியில் சேர்ந்தார் வ.சு. இலண்டன் மாநகர ஆசிரியர் கல்லூரி நடாத்தும் தேர்வினை எழுதுவதற்கு அக் கல்லூரி பயிற்சி தந்து வந்தது. அத்தேர்வுக்குச் சென்று வெற்றி பெற்றார். மருத்துவக் கல்லூரியில் சேர்தற்குரிய வாய்ப்பு உண்டு. ஆதலால் அம் முயற்சியில் ஆர்வமாய் ஊன்றுதற்கு அரங்கர் ஏற்பாடு செய்தார். 'தந்தையோடு கல்விபோம்' என்பதை மெய்ப்பித்துவிடக்கூடாது என்பதே அரங்கரின் குறிக்கோளாக இருந்தது.

இலங்கையின் பருவநிலை வ. சு. வின் உடல்நிலைக்கு ஏற்று வரவில்லை. ஆதலால், ஓயாத நீர்க் கோவைக்கு ஆட்பட்டு அல்லலுற்றார். எவ்வகையாலும் அதனைத் தீர்க்க முடியாமையால், இலங்கையில் இருந்து பாளையங்கோட்டைக்கே திரும்பினார்.

பாளையில் இருந்தாலும் பயிலுதலில் பெரு வேட்கை யுடைய ய வ. சு. தம் பயிற்சியை விட்டார் அல்லர். வீட்டில் இருந்து கொண்டே தேர்வுக்குரிய பாடங்களைத் தொடர்ந்து பயின்று தேர்வுக்குச் சென்று, ஆங்கு எழுதும் முயற்சி மேற்கொண்டார். அவ்வாறே உரிய காலத்தில் சென்று தேர்வு எழுதி அத் தேர்வில் வெற்றியும் பெற்றார்.

இலண்டன் மாநகரத் தேர்வில் பெற்ற வெற்றி, மருத்துவக் கல்லூரியில் சேர ஊக்கியது. ஆனால், அம் முயற்சி வெற்றி தரவில்லை. எனினும் திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் இடைநிலை வகுப்பில் சேர்ந்து தொடர்ந்தார். இவற்றுக் கல்லாம் தூண்டலும் துணையுமாக இருந்தவரும் ஆக்கமும் ஊக்கமும் தந்தவரும் அரங்கரே என்பதைச் சொல்ல வேண்டிய தில்லை. ஆகலின், அரங்கர் சமயப்பணி மொழிப்பணிகளில் ஊன்றியிருந்தாரேனும், தம் குடும்பத்திற்குச் செய்யத்தக்க பணிகளில் கருத்தாகவே இருந்தார் என்பது விளங்கும்.

அரங்கர்க்கு இளமையிலேயே தொகுப்பு ஆர்வம் மிக்கிருந்தது. கிடைத்தற்கு அரிய நூல்களைத் தொகுத்தல், சான்றோர்கள் அடியார்கள் படம் தொகுத்தல், உயர்ந்த பெரு