17.
தூண்டித்துலக்குதல்
(மரத்தில் இருந்து உதிரும் பழம், மண்ணில் வீழ்வதில் ஒன்றும் புதுமை இல்லை. ஆனால், அத் தூண்டலைக் கொண்டு புவிஈர்ப்பாற்றலைக் கண்டு கொண்ட ஐசக் நியூட்டன் செயலே புதுமை. "சுடர் விளக்காயினும் தூண்டுகோல் வேண்டும் என்பது தமிழ்ப் பழமொழி.)
துலக்கமிக்கோர் பலர் உலகில் உள்ளனர். அவர்கள் தங்களைச் சூழ்ந்துள்ள மக்களிடையில்துலக்கமாகத் திகழ்வர்; குன்றின்மேல் இட்ட விளக்காகவும் சுடர் விடுவர். ஆனால், அவர்கள் பிறரைத் துலக்கமாக்கத் திறமில்லாராகக்கூட இருப்பர். இது கண்கூடு.
கழக ஆட்சியாளர் வ.சு. துலக்கமிக்கவர்; தாம் துலக்கமாகத் திகழ்வதுடன் பிறரைத் துலக்கமாக்கவும் வல்லவர். அவர் தூண்டித் துலக்குதலில்நீண்ட செயல் வீரர்! காலந்தோறும் அவரால் தூண்டப்பெற்றுத் துலக்கமிக் கோராய்க் கடமை புரிந்தவர்கள் எண்ணற்றோர்.
'தோன்றிற் புகழொடு தோன்றுக' என்பதற்கு ஏற்பத் தோன்றிய திறலோரும், மடியென்னும் முடிவிலாப் பகைக்கு இரையாகி வாளா அமைவதுண்டு. வீண் செயலிலும் வேண்டா அரட்டையிலும் பொழுதைப் பாழாக்குவதுண்டு; எடுத்துப் போற்றுவார், எழில் செய்து காண்பார் இல்லாமல் ஏமாற்ற மீக்கூர்ந்து 'எப்படியோ ஒழிகிறது' என்று வெறுப்பால் ஓய்வாரும் உண்டு; நமக்கு அத் திறம் உண்டா? நாம் செய்து தானா நாடு ஏற்கப் போகிறது? எனத் தாழ்வு மனத்தால் கடனாற்றாதமை வாரும் உளர். இத்தகையரைத் தட்டி எழுப்பியும், தூண்டித் துலக்கியும் நாடு மதிக்கும் நற்செயல் வீரர் ஆக்கிய பெருமைக் குரியவர் அரியர். அவ் வருஞ்செயலைச் செய்து செய்து தழும் பேறிப்போய் தனிப்பெருந்தகையர் வ.சு. சுடரொளியைத் தன்னிடத்துக் கொண்டு நூல் பல யாத்த நுண்ணளிவுச் செல்வர் பலர் நினைவு கூர்ந்து இவர்தம் தூண்டித் துலக்கலுக்கு மெய்யார்ந்த சான்றுகளாக உள்ளனர். தமிழன்னை செய்த