ஓ
கழக ஆட்சியர் வ.சு.வரலாறு
127
மக்களாட்சி நடைபெற்றுவரும் நம் நாட்டுத் தேர்தல் மேடைகள் எவ்வாறு இயங்குகின்றன என்பதை அறிவோம். பிறரை வசை பாடுதற்கு அமைந்த கூட்டமைப்பு மேடை தேர்தல் களமேடை. கட்சி மேடையும் அவ்வாறே ஆயிற்று. தம்மை யுணர்ந்து தகவுணர்ந்து பேசுவார் அரியர் என்பது மட்டும் இல்லை. இலர் என்றே கூறலாம். இவ்வாறே ஒரு பதிப்பாளர் பிறர் பதிப்பு நூல்களைப் பாராட்டுவதே அரிது. பிறர் பதிப்பு நூலுக்கு விளம்பரமும் தருவரோ? அதனைச் செய்யும் சீர்மையும் படைத்தவர் வ.சு. என்பதை 'உடையவரே’ உரைக்கும் உரையால் உவந்து கேட்போம்:
“அக் காட்சி கழக வெளியீடுகள் பலவற்றையும் பரப்பி வைத்துக் காட்டும் ஒரு விளம்பர உத்தியாகலாம் என நினைத்துச் சென்ற பலரும் தங்கள் கண்முன்னே விலை மதிப்பற்ற தமிழ் நவமணிகளை - பொற்கலன்களைப் - பரப்பி வைத்து ஒளிவீசச் செய்திருந்த காட்சியைக் கண்டு வியந்து நின்றனர், நயந்து போற்றினர்." என்று தாம் நேரில் கண்ட காட்சியை உரைக்கிறார் பேராசிரியர். அ.மா. பரிமணம்.
"பொறாமை உள்ளம் கொண்டவர் எவரேனும் இது சைவ சித்தாந்தக் கழகத்தின் புத்தகக் கடை வியாபாரம் என எண்ணு வாராயின் அது பெருந்தவறு என்பதற்கு ஒரு சான்று தருவேன். எனது தமிழ் அகராதிக்கலை என்னும் நூலை இந்தக் காட்சியில் கண்டேன். என் கண்களை என்னால் நம்பவே முடியவில்லை. இந்த நூலை வெளியிட்டு விற்பனை உரிமை பெற்றிருப்பது வேறு பதிப்பகம். இந்தநூலுக்கும் கழகத்திற்கும் நெருக்கமான தொடர்பு இல்லை. இந்த நிலையில் இந்நூல் காட்சியில் இடம் பெறுவானேன்? அகராதிக்கலை பற்றித் தமிழில் வெளிவந்துள்ள முதல் பெரிய ஆராய்ச்சி நூல் இதுதான். எனவே, கலையுணர் வோடும், தமிழ் வளர்க்கும் பற்றுள்ளத்தோடும் கழகத்தினர் இந் நூலைக் காட்சியில் வைத்து மக்களுக்கு அறிமுகப்படுத்தி யுள்ளனர் என்பது தெளிவாகிறது" என்று குறிப்பிடுகிறார் புலவர் சுந்தர சண்முகனார். இவை திரு.வ.சு. அவர்கள் அரிதின் முயன்று தொகுத்து வைத்துள்ள காட்சிக் கருவூலத்தைக் கண்டு களித்த அறிஞர் இருவர் உரைகாளம். எஞ்சிய காட்சிச் சிறப்பு தொகுத்தலும் வகுத்தலும்என்னும் தலைப்பில் காணலாம்.