126
இளங்குமரனார் தமிழ்வளம் - 27
"அவர்கள் என் சொந்த வெளியீடான தமிழ் வரலாறு, வட மொழி வரலாறு, இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்? வண்ணனை மொழி நூலின் வழுவியல், திருக்குறள் தமிழ் மரபுரை என்னும் என்னும் நூல்கள் அச்சானபோதும் எனக்கு, மறைமலையடிகள் நூல்நிலையத்தில் தங்க இடம் தந்தும், இறுதிப் படிவ மெய்ப்புக்களை யெல்லாம் மூலத்துடன் ஒப்பு நோக்கிப் பொறுமையாகவும் செவ்வையாகவும் திருத்திக் கொடுத்தும், அச்சானவுடன் அழகாகக் குறித்த காலத்திற்குள் கட்டடம் செய்வித்தும் அனுப்பச் சொன்ன இடங்கட்கெல்லாம் தப்பாது அனுப்புவித்தும் வேண்டும்போதெல்லாம் வேண்டிய அளவு கடன் தந்துதவியும் பல்வேறு வகையிற் செய்து வந்த உதவியும் வேளாண்மையும் முற்றச் சொல்லுந் திறத்தன வல்ல" என்று மொழிஞாயிறு பாவாணர் அவர்கள் குறித்தல் இவர்தம் வேளாண்மைத் திறனை வெளிப்படுத்தும். "நாடு பெறும் பயனே நம் பயன்,நாடு இப் பயனைப் பெறுவதற்கு நம் உதவியும் செய்தற்கு வாய்த்ததே" என்று எண்ணும் பெருமனத்தார்க்கு அன்றிப் பிறர்க்கு இத் தன்மை இயல்வதன்றாம். இதனாலேதான்,
"சுழன்றும் தமிழுலகம் சுப்பையாப் பின்னாம் உழந்தும் அவனே தலை"
என்று வள்ளுவத்தை அடியொற்றி
அவ்வொற்றியரால்
பாராட்டப் பெறும் பேறுற்றார். (திருக்குறள் தமிழ் மரபுரை)
தவத்திரு. மறைமலையடிகளார் வரலாற்றை அவர் திருமகனார் மறை. திருநாவுக்கரசு விரிவாக எழுதி அச்சிட்டு வந்தார். அவ்வச்சீட்டுப் பணியில் பல இடர்கள் நேரிட்டன. நூலை முற்றுவித்து வெளிப்படுத்துதலும் அருமையாகி நின்ற நிலையில் திரு வ.சு. தலையிட்டு உதவினார். காலத்தால் செய்த உதவியைக் கருதிப் பாராட்டுகிறார் நூலாசிரியர். “அடிகளார் வரலாறு 640 பக்கம் அச்சாகியது. அவ்வளவில் பணி தடைப்பட்டு நின்றது. அந்நிலையில் என் அன்பிற்குரிய அத்தான் வ. சுப்பையாபிள்ளை ஏற்பாட்டின் படி மேற்கொண்டு நூற்பதிப்பைச் சென்னையில் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகச் சார்பில் அப்பர் அச்சகத்தில் பதிப்பிடுவதென ஓர் ஒப்பந்தம் எனக்கும் அவர்கட்கும் இடையே ஏற்பட்டது. அதன்படி மேற்கொண்டு ஏறத்தாழ 328 பக்கங்கள் அங்குப் பதிப்பாயின." (முகவுரை, மறைமலையடிகள் வரலாறு).