உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கழக ஆட்சியர் வ.சு.வரலாறு

139

"தமிழ்நாட்டில் தமிழ் இசைக்கு எதிர்ப்பு, தமிழ் ஆட்சி மொழிக்கு எதிர்ப்பு, கல்லூரிப்பாடமொழி தமிழ் எனின் எதிர்ப்பு, திரிபுற்ற பிறமொழிகளிலுள்ள ஊர்ப்பெயர்களையும் நிலையப் பெயர்களையும் தூய தமிழில் மாற்றினால் எதிர்ப்பு, சென்னை இராச்சியத்தைத் தமிழ்நாடு என மாற்றியபோது எதிர்ப்பு, இல்லச் சடங்குகள் தமிழில் நடைபெற வேண்டுமானால் எதிர்ப்பு, தனித்தமிழ் என்றாலே எதிர்ப்பு இங்ஙனமெல்லாம் எதிர்ப்புகள் தோன்றிய போது தமிழ் அருச்சனைக்கு ஏற்பட்டது பற்றி வியப்புறுதற்கில்லை."

“சென்னை உயர்நீதி மன்றத்தில் திருவாளர்கள் தேவநாதன் முனிரத்தினம் ஆகியோரால் தமிழக அரசு திருக்கோயில்களில் தமிழில் அருச்சனை செய்தல் வேண்டும் என்று பிறப்பித்த ஆணையைத் தள்ளுபடி செய்யுமாறு வேண்டித் தாக்கல் செய்த ரிட் (வழக்கு) விண்ணப்பத்தின் பேரில் யாரெனும் வைணவ மடத் தலைவ (ஜீய) ரோ சைவமடாதிபதியோ ஆணைப்பத்திரம் தாக்கல் செய்தால் மட்டுமே வழக்கு ஆய்வுக்கு எடுக்கப்பெறும் என்று உயர்நீதி மன்ற நடுவர்கட்டளை இட்டனர்.

"இதன்பேரில் திருப் (ஸ்ரீ) பெரும்புதூர்வைணவ மட தலைவரான திரு. இராமானுசசீயர், திரு. வானமாமை வைணவமடத்தலைவர், காஞ்சிபுரம் ஞானப்பிரகாசர் மடத்துத் தலைவர் அருட்டிரு ஞானப்பிரகாச தேசிக சுவாமிகள் ஆகிய மூவரும் திருக்கோயில்களில் தமிழில் அருச்சனை செய்வது ஆகமநெறிக்கு முற்றிலும் மாறுபட்டது என்றும் சமற்கிருதத்தி லுள்ளதைத் தமிழில் மொழி பெயர்த்துச் சொல்வதால் தெய்வத் திருவருள் விளக்கம் கெட்டு விடுமென்றும், ஆகம வழிவந்த அருச்சனை முறையை மாற்றுவதற்கு நமக்கு உரிமை இல்லை என்றும் 2000 ஆண்டுகட்கு மேல் சமற்கிருத நாமாவளிதான் கோயில்களில் கடைப்பிடித்து ஓதப்படுகிறது என்றும், சமற்கிருதத்திலுள்ள 'நமஹ' என்பதன் பொருள் 'போற்றி' என்பதில் இல்லை என்றும் தங்களுடைய ஆணைப் பத்திரங்களில் தெரிவித்தனர்.

இச் செய்திகளை எல்லாம் அறிந்த வ.சு.வின் உள்ளம் துடித்தது. திரு. ஞானப்பிரகாசர் போட்டுவரும் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தத் துணிந்தார்.