27. மறைமலை மருகர்
(மரம், மரத்தில் இருந்து வித்து, வித்தில் இருந்து மரம், இவ்வாறு வழிவழித்தொடர்ந்து வருவதே மரபு; 'வாழையடி வாழையென' வருவதும் மரபே! மரபு பேணிக் காப்பார் மருகர். மரபுப்புகழ் மருகர் புகழாம்; மருகர் புகழ் மரபுப் பெருமையாம். இது தொல்பழவழக்கு)
அறிஞர் சாக்ரடீசுக்கு ஒரு பிளேட்டோ; மார்க்கசுக்கு ஓர் ஏங்கல்சு ; இராமகிருட்டிணருக்கு ஒரு விவேகானந்தர்; காந்தியடி களுக்கு ஒரு நேரு; மறைமலையடிகாளருக்கு ஒரு தாமரைச் செல்வர் வ.சு.
கிழமைமுறையால் அரங்கரின் தம்பியாராகிய வ.சு. மறைமலையடிகளார்க்கு மருகரே! ஆயின் இங்கு அக் கிழமை முறை ஒன்று கொண்டு மட்டும் மருகராகப் போற்றினோம் இல்லை. வழி வழியாக மறைமலையார் தொண்டு நிலைபெறுத்தும் வித்தகச்செயலாண்மை வீறென்று கொண்டே அவரை மருகர் எனக் குறிப்பிட்டோம் என்க.
நூல்
இளமையிலேயே உண்டாகிய அடிகளார் தொடர்பு, அரங்கர் திருமணத்தால் அமைந்த நெருக்கம், வெளியீட்டால் அமைந்த அணுக்கம் இன்னவெல்லாம் உலகில் பொதுப்பொருளானவை! எவர்க்கும் வாய்க்கத்தக்க வழிமுறைகள். ஆனால் சிறப்புப் பொருளாக அமைந்தது அடிகளார் திருப்பெயர் உலகம் உள்ள வரை நிலைக்கச் செய்துவரும் திருவளர பணிகளே.
திரு.வ.சு. அவர்கள், அடிகளார் மங்கலப்புகழ் பரப்பும் முரசறை முதுகுடி வள்ளுவப் பெருந்தகை; அவர் முழக்கும் முரசம், செந்தமிழ்ச்செல்வி; அடிகளார் திருப்பெயரும் ஒளிக் கருத்தும் களிநடம் செய்யாதொழிந்த ஓரிதழ்தானும் உலவியது உண்டோ? இப் பணிணை இடையீடு இன்றிச் செய்து வருவார் எவர்? செப்பருங்குணத்து இச் சுப்பையவேள் ஒருவரே! ஆகலின் ‘மறைமலை மருகர்' அவர் என்க!