232
இளங்குமரனார் தமிழ்வளம் - 27
விளக்கம் பெறுகிறது. அதற்கு மூலவர் திரு.வ.சு. அவர்களே. இவ்வாறு இல்லறமாண்பு மக்கட்பேறு பண்டை வீரப்பெண் மணிகள், காதற்சிறப்பு, வீரச்சிறப்பு, பாரிவள்ளல், வள்ளுவர் மனைமாட்சி;, தலைவி தலைவன் பெயரைக் கிளி வாயாற் சொல்லக்கேட்டு இன்புறுதல்' என்பவை ஒன்றில்ஒன்று கருத்து விளக்கம் விரிந்து ஒப்புமையும்செறிந்து ஓவியமும் ஆகியுள்ளன. தமிழ்நூல்பேணல்" என்னும் தலைப்பில் தமக்கு உவகை யானதும் விரும்பி ஈடுபட்டுள்ளதும் ஆகிய துறையைத் திரு.வ.சு. விளக்கியுள்ளார். தமிழ் நூல் பேணுமுறைகள் நான்கனைக் குறித்துரைக்கிறார். அவற்றுள் முதன்மையானது, தமிழ்நூல் அகராதி ஒன்று எழுதப்படல் வேண்டும் என்பது. அதனைத் தகவுற விளக்குகின்றார் :
"தமிழ் நூல்களில் இப்போது கிடைக்கப் பெறுவனவற்றிற் கும், பெயரளவாய்க் கேட்கப்படுவனவற்றிற்கும் விளக்கம் எழுதப்படல் வேண்டும். தமிழ் நூல் ஒவ்வொன்றையும் எடுத்து அதன் ஆசிரியர் பெயர், அதனைப் பதிப்பித்தவர் பெயர், அந்நூல் கூறும் போது, எழுதப்பட்டால், எத்தனை பதிப்புகளைப் பெற்றிருக்கின்றது.
எந்த நூலில் அஃது எடுத்தாளப் பெற்றிருக்கின்றது, யாரிடம் இப்போது கிடைக்கப்பெறும் என்னும் குறிப்புகளை எழுதி அகராதி வரிசையில் அமைக்க வேண்டும். அநேக நூல்கள் பெயர் தெரியாமலே மறைந்து ஒழிகின்றன. மேனாட்டார் தம்முடைய நூல்களுக்கு 30,000, 40,000 பக்கங்களில் அகராதி எழுதி வைத்திருக்கின்றனர்; ஆண்டுக்கொருமுறை அதனைப் புதுப்பித்தும் வருகின்றனர். முதற்கண் நூற்பெயர் மறையாதிருப் பதற்கு இஃதோர் சிறந்த வழியாகும்.'
தமிழ் இலக்கிய அகராதி, தமிழ்ப்புலவர் அகராதி எனச் சில நூல்கள் இப்பொழுது வெளிவந்திருப்பினும் திரு.வ.சு. அவர்கள் கூறுமாப்போல ஓர் அகராதி வெளிப்படவில்லை. இம் முயற்சி இன்னும் புதிது மேற்கொள்ளவேண்டிய முயற்சித் தூண்டலாகவே உள்ளது. மற்றவை, தமிழ்மொழியில்உள்ள நூல்களெல்லாம் எப்போதும் தட்டின்றிக் கிடைக்கவேண்டுவது குறித்தும், பொருள் வளமுடையார் தமிழ்நூல்கள் வாங்க வேண்டும் இன்றியமையாமை குறித்தும் தமிழ்மக்கள் தம்மிட முள்ள அருஞ்சுவடிகளைத் தக்காரிடம் தந்து பதிப்பிக் உதவ வேண்டுதல் குறித்தும் குறிப்பிடுவனவாம்.