உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




282

இளங்குமரனார் தமிழ்வளம் - 27 -

குடும்பக் கட்டுப்பாடு

எங்கும் சிவப்பு முக்கோணப் படங்கள், அறிக்கைகள், விளக்கங்கள், விளம்பரக்கள். இவை இன்னவென அறியாத காலத்தே இத் திட்டத்தைத் தாமே விரும்பி ஏற்றுக்கொண்டவர் திரு.வ.சு. அவருக்கு அமைந்த துணையாக வாய்ந்தவர் 'அப்பனுக்கு ஏற்ற அம்மை.'

இரண்டே பிள்ளைகள்; இனி மக்கள் போதும்! இதற்கு மருத்துவமா? மாத்திரையா? மனக்கட்டுப்பாட்டில்வாராத குடும்பக் கட்டுப்பாடு குறைபாடே! அறிவறிந்த அவர்கள், குடும்பக்கட்டுப்பாட்டை மனக்கட்டுப்பாட்டால் காத்தனர். தங்கள் அளவில்சிக்கெனப் பிடித்த கொள்கை தம் அன்புக்குரிய குடும்பங்களிலும் தவழ ஆர்வமுற்றனர். பலர் அடிக்கடி குழந்தை களைப் பெற்றுத் தவழவிட்டுக்கொண்டு இருப்பதைக் கண்டு அறிவுரை கூறுவதுண்டு. 'எப்படி இத்தனை பிள்ளைகளைக் காக்கப் போகின்றீர்கள்? இவர்களை ஆளாக்கிவைக்கப் போகின்றீர்கள் - இதனோடாவது நிறுத்திக் கொள்ளுங்கள்' என்று வ.சு. கூறுவார். கண்டித்தும் கூறுவார். இதனை வரவேற்ற வரும் உண்டு. இவரா நம் குடும்பத்தைக் காக்கப் போகிறார்? நமக்குத் தெரியாதா? என்று உள்ளே புழுங்கிக் கொண்டவர் களும் உண்டு. இத்தகையவர்களுள்ளும், 'அன்றே அறிவு சொன்னார், அதைக் கேட்டிருந்தால் இப்பொழுது இவ்வளவு துன்பப்பட மாட்டோம்' என்று இன்று சொல்பவர்களும் உண்டு. காலம் கடந்து நினைத்தால் என்ன? நினையாமல் போனால் என்ன? எல்லாம் ஒன்றே!

மெய்ப்புப் பார்த்தல்

எத்தனைமுறை துருவிப் பார்த்தாலும் ஏமாற்றக் கூடியது மெய்ப்பு. ஆனால், அதனை அறப்பார்த்தலில் தேர்ச்சிமீக் கூர்ந்தவர் திரு.வ.சு. அச்சகத்தல் ஒருமுறை மெய்ப்புப் பார்க்கப் பெறும். மூலப்படியுடன் ஒப்பிட்டுக் கழகப் புலவர்களால் மெய்ப்பு ஒருமுறை பார்க்கப்பெறும். நூலாசிரியர் அல்லது பதிப்பாசிரியராலும் ஒருமுறை பார்க்கப்பெறும். இத்தனை முறை பார்த்தாலும் இறுதியாக ஒரு பார்வை தாம் பாராமல் எந்த ஓர் ஆங்கில நூலும், தமிழ்நூலும் அச்சிடுதற்குக் கட்டளை தருவதில்லை வ.சு. பிறர் கண்களை ஏமாற்றிய பிழையும் இவரிடம் தப்பிப் பிழைப்பதும் இல்லை.