உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கழக ஆட்சியர் வ.சு.வரலாறு

29

கைகொடுத்து உதவ வணிகத்தில் ஈடுபட்டார். திறமும் தேர்ச்சியும் மிக்கவர்கள் செய்யும் வணிகமே திடுமென்று சாய்ந்துவிடக் காண்கிறோம். இவ்விளைஞரால் போட்டிமிக்க வணிக உலகில் ஈடுகொடுக்க இயலுமா? இயலாமல் போகவே வணிகம் இழப்பில் முடிந்தது.

பொருள் என்னும் செல்வச் செவிலி இருந்தால் குடும்பம் குறைவின்றி நடக்கும். தாங்குவாரும் தரிப்பாரும் பலராக வருவர். தலைவர் இல்லா வீடு, இருந்த பொருளும் இழப்புக்கு ஆகிய குடும்பம்; இந்நிலையில் என்ன செய்ய முடியும்? "கொடிது கொடிது வறுமை கொடிது; அதனினும் கொடிது இளமையில் வறுமை" என்று புலம்பலாம். உண்டாகிய பள்ளத்தை மேடாக்க வகை வேண்டுமே!

6

படிப்பிலே பேரார்வம் உடைய அரங்கனார் தம் படிப்பை மூன்றாம் படிவ அளவிலே விடுத்து வேலை தேடினார். வழக்குரைஞர் ஒருவரிடம் எழுத்தர் வேலையில் அமர்ந்தார். அவ் வேலையில் அரங்கர்க்கு ஈடுபாடு ஏற்படவில்லை. வேறு வேலை தேடித் தூத்துக்குடிக்குச் சென்றார். ஆங்கிருந்த வழுதூர் அழகிய சுந்தரம்பிள்ளை என்பார் துணையினால் கப்பல் ஏறிக் கொழும்புக்குச் சென்றார். ஆங்கிருந்த எழுத்தர் பணியில் அமர்ந்தார். இது நிகழ்ந்தது 1907 ஆம் ஆண்டில் ஆகும்.

தமையனார் இருவரும் தம் அயரா உழைப்பால் குடும்பப் பொறையைத் தாங்கிக்கொள்ளவே, இளையவர் வ.சு. பாளையிலுள்ள தூய சவேரியார் உயர்பள்ளியில் சேர்ந்து பயின்றார். விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பதற்கு ஏற்றவாறு கல்வியில் கருத்துடையவராக விளங்கினார்.

பெரிய குடும்பத்தைத் தாய் தாங்கி நிற்கும் பெருமை; அக் குடும்ப வருவாய்க்காகக் கல்வியை விடுத்தும் தொழிற் கடமையிலே ஈடுபட்ட மூத்தவர்கள் நல்லுள்ளம்; இயல்பிலே தமக்கு அமைந்த பண்பாடு - இவையெல்லாம் இளம்பருவத்திலேயே வ.சு.வைச் 'சிறுப் பெரியார்' ஆக்கிவிட்டன. ஆதலால் காலம் தவறாமை, கடமையில் கண்ணாக இருத்தல், ஒழுக்கத்தால் உயர்தல் ஆகியவை யெல்லாம் ஒருங்கே வளர வளர்ந்து வந்தார். இதனால் ஆசிரியர்கள் பாராட்டுக்கு உரியவராய் விளங்கினார்.

ஆண்டுதோறும் தேர்வுகளில் சீருறத் தேறி வகுப்பில் சிறப்பிடம் பெற்றார்; கணக்குப் பாடத்திலும் பொழிப்பாடங் களிலும் இணையற்ற திறம் காட்டிப் பரிசுகள் பெற்றார்.