உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கழக ஆட்சியர் வ.சு.வரலாறு

31

தடைப்பட்டு விடுதல் ஆகாது என எண்ணினார். அதற்குத் தக்க திட்டமிட்டார். தம்பியைக் கொழும்புக்கு வருமாறு எழுதினார். இளவல் உள்ளமும் அண்ணலார் எண்ணத்தை உவந்து ஏற்று ஆங்குச் செல்ல முந்தியது.

1916 ஆம் ஆண்டு சூலைத் திங்கள் வ.சு. கொழும்புக்குச் சென்றார். ஆங்கிருந்த முதனிலைக் கல்லூரியில் படிக்கத் தொடங்கினார். இலண்டன் மாநகர ஆசிரியர்கல்லூரி நடத்தும் தேர்வு எழுதுவதற்கு அக் கல்லூரி பயிற்சி தரும். அத் தேர்வு எழுதி வெற்றி பெற்றோர், மருத்துவக் கல்லூரியில் சேர்தற்கு வாய்ப்பு உண்டு. ஆதலால் அத் தேர்வு பெறுதற்குப் பேரார்வம் கொண்டார் வ. சு. அரங்கனார் ஆர்வமோ தாம் பெறாப் பேற்றைத் தம்பியரேனும் பெற வேண்டும் என்ற முனைப்பிலே இருந்தது. ஆனால், தொடர்ந்து பயில்வதற்கு இயலாமல் ஒரு குறுக்கீடு உண்டாயிற்று.

இலங்கை வாழ்வு வ.சு. உடல்நிலைக்கு ஏற்றுக் கொள்ள வில்லை. நீர்க்கோவை உண்டாகி நீங்காமல் வாட்டியது. ஓயாத் தடிம நோயுடன் எவ்வளவு காலம்தான் போராட முடியும்? முடியாமல் கொழும்பில் இருந்து பாளையங்கோட்டைக்கே திரும்பினார்.

எடுத்த பணிக்குத் தடையுண்டானால் பலர் சோர்ந்து விடுவர். வாழ்விலே எரிச்சலும் வெறுப்பும் அடைவர். ஆனால், கொள்கையில் உறுதியாக நின்ற வ. சு. சோர்ந்துவிடவில்லை. உறுதியில் தளரவில்லை. உரிய பாடங்களை யெல்லாம் தம் ஊரில் இருந்து கொண்டே பயின்றார். முயற்சி மெய்வருத்தக் கூலி தராமல் போகாதே!

பாளையில் இருந்தே பயின்ற வ.சு. தேர்வுக்குரிய காலத்தில் மீண்டும் கொழும்புக்குச் சென்றார். தேர்வைத் திறமாக எழுதினார். ஒரே முறையில் தேர்ச்சியும் பெற்றார். இம்முறை கொழும்புக்குச் சென்றது இவர்தம் பிறவிப் பயனை நிலைபெறுத்தத் தக்க ஒரு வாய்ப்பாக அமைந்தது.

அரங்கனார் கொழும்புக்குச் செல்லு முன்னரே தூத்துக்குடி அழகிய சுந்தரம்பிள்ளை அவர்களால் மறைமலையடிகளாரைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தார். அதன்பின்னே அடிகளார் இயற்றிய அரிய நூல்களைத் தருவித்துக் கற்று வந்தார். அடிகளாரின் சிவத்தொண்டுக்கும், செந்தமிழ்த்தொண்டுக்கும் தம் உள்ளத்தைப் பறிகொடுத்து மெய்யடியாராக விளங்கினார்.