உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228

இளங்குமரனார் தமிழ்வளம் - 28

இவர் தம் தவத்தந்தையார் நல்லண்ணக் கவுண்டர் என்பார். தவத்தாயார் மாராயம்மாள் என்பார்.

பெற்றோர் பெயரீடே, அவர் தம் சிறப்பை வெளிப்படுத்துமே. 'நல்லண்ணர்' என்பது எத்தகைய நயத்தகு பெயர்! அருமை அன்னையார் பெயரும் தான் என்ன? 'மாராயம்' என்பது புறப்பொருளில் பொலியும் துறைகளுள் ஒன்றேயன்றோ! அது, அரசர் புகழும் அரியவீரர் பெறும் பேறாகும். "மறவேந்தனிற் சிறப்பெய்திய விறல்வேலோர் நிலையுரைத்தன்று" என்பது அதன் இலக்கணமாகும்!

ஊர்ப்பெயர்தான் எத்தகையது? "செங்கோடன்" என்பது எத்தகைய சிறந்த செவ்விய பெயர்? செங்கோடு என்ன, செங்கோட்டு வேலர் என்ன! நல்ல தமிழ்க்குடியினரின் இயல்பான ஊர்ப் பெயரும் ஆட்பெயரும் தூயதாக எப்படி இருந்தன என்பதற்கு எடுத்துக் காட்டாம் பெயர்கள் இவை.

மூன்றாம் முத்து

முத்து என்னும் பெயர் தமிழகத்தில் எல்லாப் பகுதிகளிலும் ஆண் பெண் இருபாலர்க்கும் வழங்கப்படும் பெயரேயாம். ஆனால், 'குப்பு முத்து' என்னும் பெயர் அரிதேயாம். அவ்வருமை எப்படி ஏற்பட்டது, இம் முத்துவுக்கு?

'பிச்சை' என்னும் பெயர் கேட்டல் மிகுதி. பிச்சையா, பிச்சம்மாள் என இருபாற் பெயரும் உண்டு. அவ்வாறே மூக்குப் பெயரும் மிகுதி. மூக்கம்மாள், மூக்காயி முதலிய இருபாற் பெயர்களும் உண்டு. இப்பெயர்களைக் கொண்டே அக்குழந்தை யின் பிறப்பு வரலாறு எவராலும் அறியக் கூடியதாகும்.

முதற்குழந்தை பிறந்து இறந்து, பின்னே இரண்டாம் குழந்தை பிறந்து அக்குழந்தையும் இறந்து போக, மூன்றாம் குழந்தையாவது உயிரோடு தங்கவேண்டும் என்று இறையை வேண்டி அத்தெய்வத்திடமிருந்து பிச்சை பெறுவதுபோலப் பெற்றபிள்ளை பிச்சை எனவும், இக்குழந்தை எங்கள் குழந்தை அன்று தெய்வத்திற்கு உடைமையாகப் பட்டபிள்ளை என்பதற்கு அடையாளமாக மூக்குக்குத்தி ஒப்படைத்துள்ளோம் என வழங்கும் பெயர்கள் மூக்கையா மூக்கம்மாள் எனவும் வழங்குவன். இவற்றுக்கெனச் சடங்குகள் செய்வதும் உலக வழக்கேயாகும். குப்புமுத்து என்பதும் அப்படிப்பட்ட பெயர்களுள் ஒன்றேயாகும்.