உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256

இளங்குமரனார் தமிழ்வளம் - 28

திறப்பு விழாவுக்குத் திருவள்ளுவர் அருளிய அறவாழ்வு வாழ்ந்து காட்டும் செயல்திறம் உடையவர்களையே தலைமை முன்னிலை வாழ்த்து ஆகிய எல்லாவற்றுக்கும் அழைக்கத் திட்டப்படுத்தி யுள்ளேன். அத்திட்டப்படியே தங்கள் வருகை தவச்சாலைக்கு ஏற்படுதல் வேண்டும்" என்றேன். முத்து ஏற்கவும் இல்லை; மறுக்கவும் இல்லை!

எழுந்தார்; நடந்தார்; சில நொடிகளில் திரும்பினார்; கையில் 50 ரூ பணத்தாள் கட்டு ஒன்றை வைத்திருந்தார். "தவச் சாலை வேலைக்குப் பயன்படும் வைத்துக் கொள்ளுங்கள் என்றார்.

கேளாமலே எவ்வளவு எளிமையாக இனிமையாகக் கொடுத்து வைத்த தொகை எடுத்துத் தருவது போலத் தரும் இக் கொடைத் திறம் "கொடையும் தயையும் பிறவிக் குணம்” என்பதை மெய்ப்பிக்கின்றது என எண்ணினேன்.

அப்பொழுதில், "கொள்ளுங்கால் முகனும் கொண்டது கொடுக்குங்கால் முகனும் வேறாதல் இன்றே யன்று பண்டே உண்டு" என்னும் கலித்தொகை தரும் பழங்காட்சி மின்னலிட்டுக் "கொடுத்து வைத்ததைக் கூட இப்படி மலர்ச்சியொடும் இனிய சொல்லொடும் தருவாரும் அரியரே" என வியப்புற்றேன்.

பல்கால் பலரிடம் கேட்டு மகிழ்ந்த செய்தி நேருக்கு நேர் மெய்யாகக் கைம்மேல் கண்டு "இவ்வுளம் வாழ்க” என என்னுள் வாழ்த்தி விடை பெற்றுக் கொண்டு பெருமக்களோடு திரும்பினேன். அடுத்த கால் மணி நேரத்தில் ஓர் இலக்கியப் பொழிவு எனக்கு இருந்தது. அங்கு ஐயா குப்பு முத்து அவர்களும் வந்தார்கள். என் பேச்சில் சிறிது நேரத்திற்கு முன் நிகழ்ந்ததைச் சொன்னேனும் அல்லேன்! அவர் தாம் சொல்ல மாட்டாரே! நானாவது சொல்லலாமே எனின், நன்றி சொல்லுதல் என்பது முறைமை அறிந்தார் வழக்கன்று. 'நன்றியறிதல்' என்பதை வள்ளுவம் அறிவார் அறிவர். நன்றியறிந்து நயத்தகு செயற்படையல் புரிவதே நன்றறிந்தார் கடமையாம் என்க.

நூல் வெளியீட்டுக்குக் கொடை

கலைமாமணி பழனி இளங்கம்பனார், தமிழ்ப்புகழ் வெண்பாமாலை என்றொரு மாலை இயற்றினார். அவரோ பழனியார்! குப்புவோ ஈரோட்டார்! ஆயினும் என்ன! உள்ளம் நெருங்கினால் ஊரும் உறவும் நெருங்கமாட்டாவா?