உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 29.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

இளங்குமரனார் தமிழ்வளம் - 29

கலந்து கொண்ட நாடுகள் 11. அவற்றுக்குரிய கப்பல்கள் 67. உலகம் கண்டறிதற்கு அரிய கப்பல் அணிவகுப்பு இது!

முன்னும் பின்னும் பிற கப்பல்கள் செல்ல நடுநாயகமாகப் பிரான்சு நாட்டுக் கப்பல் சென்றது. அதன்மேல் ஓங்கி உயர்ந்து ஒளியுடன் திகழ்ந்தது கழுகுக் கொடி. பிரான்சு நாட்டின் பெருமை மிகு அரசியார் யூசினும், எகிப்து மன்னர் இசுமாயிலும் அக்கப்பலில் இருந்து மக்களின் கரைகடந்த ஆரவாரத்தையும் களியாட் டத்தையும் கண்டு கண்டு உவகைக் கடலில் நீந்தினர். தங்கள் களிப்பைக் கையாட்டுதலாலும் வணக்க வாழ்த்துக்களாலும் புலப்படுத்தினர். பிரசிய நாட்டு இளவரசரும், கனோய் நாட்டு இளவரசரும் விழாவில் பங்கு கொண்டு பெருமைப்படுத்தினர்!

கடற்காலின் இரு கரைகளிலும் வண்ணக் கொடிகள் வனப்புற விளங்கின. இரவுப் பொழுதிலோ வண்ண விளக்குகளின் வரிசை எங்கும் ஒளிக்கடல் ஆக்கிக்கொண்டு இருந்தது. இதற்கு இடையே கப்பல்களின் அணிவகுப்புச் சென்ற காட்சியும் மக்கள் ஆரவாரமும் கண்கொள்ளாக் காட்சிகளாக இருந்தன. இவை காணாவென்று ஆடல் பாடல்களும், வேடிக்கை நிகழ்ச்சிகளும், வாணவேடிக்கைகளும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தன. எகிப்துப் பேரரசர் பெரிய நாடு ஒன்றைத் தமதாக்கி வெற்றி பெருவிழாக் கொண்டாடினால் கூட இணைகூற இணைகூற இயலாத அளவு பெருவிழாவாகத் திகழ்ந்தது கடற்கால் இணைப்புப் பெருவிழா

ஒரே நாளில் முடியும் விழாவா இது? தொடர்ந்து நான்கு நாட்கள் விழா நிகழ்ந்தது. முதல் நாள் பன்னிரண்டு மணி நேரப் பயணத்தில் 40 கல் தொலைவே கப்பல்கள் நகர்ந்து சென்றன. இடையே ஒரு நாள் இசுமாலியாப் பெருநகரில் விழாவுக்குள் விழாப்போல் ஒரு விழா எடுத்தனர். 19ஆம் நாள் மீண்டும் பயணத்தைத் தொடங்கி அடுத்த நாள் சூயசுத் துறையை அடைந்து செங்கடலில் சேர்ந்து விழாவை நிறைவு செய்தனர். விழா நிறைவுற்ற மறுநாளில் இருந்தே மேலை உலகில் இருந்து கீழை உலகுக்கும் கீழை உலகில் இருந்து மேலை உலகுக்கும் நேரிடைச் செல்லும் கடல்வழித் தொடர்பு உண்டாயிற்று.

"மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார் எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் - செவ்வி

அருமையும் பாரார் அவமதிப்பும் கொள்ளார் கருமமே கண்ணாயினார்"