உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 29.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. பனாமாத் திட்ட வளர்ச்சி பற்றி எழுதுக.

புதிய உலகத்தையும் பழைய உலகத்தையும் ஓருலகாக்கிக் காட்டும் உயர்ந்த உணர்வால் உருவாகியது பனாமாத் திட்டம். அத்திட்டத்தின் மலர்ச்சி குறித்து இக்கட்டுரையில் காண்போம்.

சூயசுக் கடற்கால் திட்ட வீரர் டிலெசெப்சு பனாமாத் திட்டத்தையும் ஏற்றுக்கொண்டு ஒன்பது ஆண்டுகள் பணியாற் றினார். ஆனால் சூயசுத் திட்டத்தைப்போல் வெற்றியாக அவரால் நடத்த முடியவில்லை. அவர் பொறுப்பேற்றிருந்த பிரெஞ்சுக் கழகமே 1889இல் கலைக்கப் பெற்றுப் புதியதோர் பிரெஞ்சுக் கூட்டுக் கழகத்தின் பொறுப்பில் திட்டம் விடப்பெற்றது. அமெரிக்கக் கூட்டரசும், பனாமாக் குடியரசும் பெரும்பங்கு கொண்டு திட்ட நிறைவேற்றத்திற்கெனப் பாடுபட்டன. 1899இல் அமெரிக்கக் கூட்டரசுத் தலைவர் மக்கின்லி கொலம்பியக் குடியரசின் ஒப்பந்தத்துடன் கடற்கால் ஆணைக்குழு ஒன்றை நிறுவினார். அதன்பின் அமெரிக்கக் கூட்டரசே பிரெஞ்சுக் கழகத்தினிடமிருந்து கொலம்பிய ஒப்பந்தப்படி பனாமாத் திட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பேற்றுக் கொண்டது.

அமெரிக்க அரசுக்குத் தரப்பெற்ற உரிமைகள் 100 ஆண்டுகள் செல்லும் என்றும், பின்னர் நூற்றாண்டுதோறும் உரிமையைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என்றும் உறுதி செய்யப்பெற்றது. கடற்கால் ஆட்சி உரிமை அமெரிக்கக் கூட்டரசுக்கே என்றும், திட்டப் பகுதியின் நில உடமை கொலம்பியக் குடியரசுக்கே என்றும், உரிமை மதிப்பாக முதற்கண் 1 கோடி அமெரிக்க வெள்ளியும், பின்னர் ஆண்டுக்கு 2 1/2 இலட்சம் வெள்ளியும் அளிக்கவேண்டும் என்றும், திட்ட வேலைகளை நான்கு ஆண்டு களில் நிறைவேற்ற வேண்டும் என்றும் முடிவு செய்யப்பெற்றது. இத்திட்ட ஒப்பந்தம் பெரும்பாலும் கொலம்பியாவுக்கே நன்மை யாக இருந்தும்கூட அது அதனை மறுப்பதிலேயே முனைந்தது. அமெரிக்கக் கூட்டரசுத் தலைவர் ரூசுவெல்டு சினங்கொண்டார்.