உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 29.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

இளங்குமரனார் தமிழ்வளம் - 29

ஐரோப்பாவுக்கு ஆல்பர்ட் வருவதெல்லாம் ஆபிரிக்கத் தொண்டுக்குப் பணம் திரட்டுவதற்குத் தானே. அதனால், ஐரோப்பாவுக்கு வந்ததும் மீண்டும் சொற்பொழிவாலும், ஆர்கன் இசையாலும் பொருள் தேடினார். "புனிதர்பால் அடிகளின் பத்தி நெறி' என்னும் நூலை எழுதி முடித்தார். செருமன் கவிஞர் கேதேயின் நினைவுப்பரிசு இவரது "மனிதசமூகத் தொண்டு" கருதி வழங்கப் பெற்றது. அப்பொருளைக் கொண்டு, கன்சுபர்க்கில் "கேதேமனை" உருவாக்கினார்.

1929 ஆம் ஆண்டு சுவைட்சர் தாமும் தம் மனைவியும் மூன்றாம் முறையாக ஆப்பிரிக்கா சென்றனர். நோயாளர் மிகுதியைக் கண்டு மருத்துவமனைக் கட்டடத்தை மேலும் விரிவாக்கினார். மனைவியார்க்கு உடல்நலம் இல்லமையால் அவர் 1930 இல் ஐரோப்பா திரும்பினார். ஆல்பர்ட் 1932 இல் ஐரோப்பாவுக்கு மீண்டார். மீண்டும் 1933 இல் இலாம்பரினி சேர்ந்தார். 1934 இல் ஐரோப்பா திரும்பினார். ஓராண்டு ஐரோப்பாவில் தங்கினார்.1935 சனவரி 4 இல் தம் அறுபதாம் பிறந்த நாளை டிராசுபர்க்கில் கழித்தார்.1935 பெப்ரவரியில் ஆபிரிக்காவுக்குச் சென்று 1939 சனவரியில் திரும்பினார். இதற்கு இடையே 1938 இல் மருத்துவ மனையின் வெள்ளி விழாக் கொண்டாடப்பட்டது. இரண்டாம் உலகப்போர் தொடங்கும் நிலைமை தோன்றியது. ஆகவே சுவைட்சர் உடனேயே தாம் வந்த கப்பலிலேயே ஆப்பிரிக்காவுக்குப் புறப்பட்டு விட்டார்.

போர் முடிவால் பிரான்சுக்கும் இலாம்பிரினுக்கும் தொடர்பே இல்லாமல் போயிற்று. இங்கிலாந்து அமெரிக்கா இவற்றுடன் தொடர்பு உண்டாயிற்று. அமெரிக்க மக்கள் நிரம்ப பொருளுதவி புரிந்தனர். சுவைட்சரின் திருக்கூட்டத்தார் அமெரிக்காவில் பெருகினர்; போரும் நின்றது. பொருளும் உதவிகளும் பெருகின. உதவியாளர்களும் வந்தனர். இலாம்பரினிக்குச் சென்று அமெரிக்கர் பலர் பார்வையிட்டு, சுவைட்சரைப் பற்றியும், அவர் தொண்டு பற்றியும் நூல்கள் எழுதினர். இனி மருத்துவமனை இனிதாக இயங்கும் என்னும் எண்ணத்தால், 1948-இல் ஐரோப்பாவுக்குத் திரும்பினார். பல நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்தார். 1949இல் மீண்டும் இலாம்பரினிக்குச் சென்று 1952-இல் திரும்பினார்.